12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் மகளிர் பிரிவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் இந்தியா முதல் ஆட்டத்தில் மாலத்தீவு அணியை வீழ்த்தியது.
தெற்காசிய விளையாட்டு போட்டியின் முதல் நாளான நேற்று குவாஹாட்டியில் மகளிர் பிரிவில் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்த்து விளையாடியது. இதில் இந்தியா 25-9, 25-9 25-10 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இலங்கை 3-0 என்ற கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
ஆடவர் பிரிவில் வங்கதேசம் 25-12, 20-25, 21-25, 31-29, 15-13 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானையும், இலங்கை அணி 25-10, 25-15, 25-10 என்ற கணக்கில் நேபாளத்தையும், பாகிஸ்தான் 25-22, 25-14, 25-20 என்ற கணக்கில் மாலத்தீவையும் தோற்கடித்தன.
தெற்காசிய போட்டியின் 2வது நாளான இன்று போட்டியை இணைந்து நடத்தும் மேகாலய மாநிலம் ஷில்லாங்கில் தொடக்க விழா நடைபெறுகிறது. மேலும் இன்று பதக்கப்பிரிவுகளுக்கான போட்டிகள் தொடங்குகிறது. பளுதூக்குதல், மல்யுத்தம், நீச்சல், சைக்கிளிங், கால்பந்து, ஸ்குவாஸ், கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகின்றன.
மல்யுத்தத்தின் பிரிஸ்டைல் பிரிவில் இந்தியாவின் ரவிந்திரா 57 கிலோ எடை பிரிவிலும், ரஞ்னிஸ் 65 கிலோ எடை பிரிவிலும் களமிறங்குகின்றனர். மகளிர் பிரிவில் பிரியங்கா சிங் 48 கிலோ எடை பிரிவிலும், அர்ச்சனா தோமர் 55 கிலோ எடை பிரிவிலும், மனிஷா 60 கிலோ எடை பிரிவிலும் களம்காண்கின்றனர்.
கடந்த முறை இந்தியா மல்யுத்தத்தில் ஆடவர் பிரிஸ்டைல் பிரிவில் 3 தங்கம், 1 வெள்ளி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. மகளிர் பளுதூக்குதலில் மிராபாய் ஷானு 48 கிலோ எடை பிரிவிலும், ஹார்ஸ்தீப் கவுர் 53 கிலோ எடை பிரிவிலும் களமிறங்குகின்றனர். ஆடவர் பிரிவில் குரு ராஜா, 56 கிலோ எடை பிரிவில் மோதுகிறார்.
ஸ்குவாஸ் போட்டிகளும் இன்று தொடங்குகிறது. ஆடவர் தனிநபர் பிரிவில் இன்று சவுரவ் கோஸல், ஹரிந்தர்பால் சிங் சாந்து விளையாடுகின்றனர். மகளிர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா, சுனைனா குமாரி கலந்துகொள்கின்றனர்.