குவாஹாட்டியில் நடைபெற்று வரும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் ராமநாதன் டென்னிஸ் போட்டியில் 2வது தங்க பதக்கம் வென்றார்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற ராம்குமார் ராமநாதன் நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சகநாட்டை சேர்ந்த ஷகத் மைனேனியை 7-5, 6-3 என்ற நேர்செட்டில் வீழ்த்தி தங்க பதக்கம் கைப்பற்றினார்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, ஷார்மதா பாலுயிஷிகா ஜோடி சகநாட்டை சேர்ந்த ரிஷிகா சுங்கரா, நடாஷா பல்ஹா ஜோடியை 7-5, 2-6,10-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் டென்னிஸில் இந்தியா 5 பிரிவுகளிலும் தங்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியது.
துப்பாக்கி சுடுதலிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. சமரேஷ் ஜங் 25 மீட்டர் சென்டர் பையர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார். ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் புரோன் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஷேயின் சிங் தங்கம் வென்றார். அணிகள் பிரிவில் இந்தியாவின் ககன் நரங், ஷேயின் சிங், சுரேந்திரா சிங் ரத்தோடு ஆகியோரை கொண்ட அணி தங்க பதக்கம் கைப்பற்றியது. 25 மீட்டர் சென்டர் பையர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் பெம்பா தமங் வெள்ளியும், விஜய்குமார் வெண்கலமும் வென்றனர்.
ஓட்ட பந்தயம்
மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சித்ரா தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கல பதக்கங்களை இலங்கை கைப்பற்றியது. ஆடவர் மற்றும் மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்க பதக்கம் கிடைத்தது. ஆடவர் பிரிவில் தருணாவும், மகளிர் பிரிவில் ஜாவுனா முர்முவும் முதலிடம் பிடித்தனர். இந்த பிரிவுகளில் இந்தியாவின் ஜிதின் பால், அஸ்வானி வெள்ளி பதக்கம் பெற்றனர்.
ஆடவருக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் தங்கமும், ஜஸ்தீப் சிங் வெள்ளியும் வென்றனர். மகளிருக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் சுமன் தேவி தங்கமும், அனு ராணி வெள்ளி பதக்கம் கைப்பற்றினர். ஆடவருக்கான ட்ரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் ரஞ்ஜித் மகேஷ்வரி தங்கம், சுரேந்தார் வெள்ளியும் வென்றனர். பாகிஸ்தானின் முகமது அப்ஸல் வெண்கலம் கைப்பற்றினார்.
கபடியில் வெற்றி
மகளிருக்கான கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதி ரான ஆட்டத்தை கோல்கள் இன்றி டிராவில் முடித்து நேபாளம் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மகளிருக்கான கபடியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 51-17 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
233 பதக்கங்கள்
நேற்று மாலை நிலவரப்படி இந்தியா 136 தங்கம், 77 வெள்ளி, 20 வெண்கலத்துடன் மொத்தம் 233 பதக்கங்கள் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இலங்கை 25 தங்கம், 48 வெள்ளி, 75 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் 7 தங்கம், 22 வெள்ளி, 42 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்திலும் இருந்தன.