விளையாட்டு

வாக்னர் பவுன்சரில் தலையில் அடிவாங்கி கீழே சரிந்த ஸ்மித் சதமடித்தார்: முன்னிலையை நோக்கி ஆஸி.

ராமு

கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் பர்ன்ஸ் 170 ரன்களையும், ஸ்மித் 138 ரன்களையும் எடுத்தனர். இருவரும் இணைந்து 289 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

பவுன்சரில் சாய்ந்த ஸ்மித்:

இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 78 ரன்களில் இருந்த பொது நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி கீழே சரிந்தார், அசைவற்று சில விநாடிகள் அப்படியே படுத்த நிலையிலேயே இருந்தார் ஸ்மித்.

இதனால் நியூஸிலாந்து அணியினரிடத்தில் கவலை ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்மித் மீண்டும் ஆட்டத்தை தொடர்ந்து சதம் கண்டு 138 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி நியூஸிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை நெருங்கியதோடு இன்னும் 6 விக்கெட்டுகள் கையில் இருக்கின்றன.

நீல் வாக்னர் பொதுவாக பவுன்சர் வீசும் பொறுப்பில் நியமிக்கப்பட மாட்டார், ஆனால் இன்று மெக்கல்லம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் தொடர்ந்து பவுன்சர்களாகவே வீசியதாக வாக்னர் தெரிவித்தார். ஆனால் ஸ்மித் அசைவற்று மைதானத்தில் சாய்ந்தவுடன் தனக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

ஆட்ட முடிவில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், இரட்டைச் சத நாயகன் ஆடம் வோஜஸ் 2 ரன்களுடனும், நேதன் லயன் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்தப் பிட்சில் ஸ்மித்தும் ஜோ பர்ன்சும் தைரியம் காட்டினர், குறிப்பாக ஸ்மித்தின் ஆட்டத்தில் தைரியத்துடன், சாதுரியமும், கறாரான உத்தியும் இருந்தது. தலையில் அடிவாங்கும் முன் வயிற்றில் முன்னதாக ஒரு அடி வாங்கினார். ஆனாலும் கவலைப்படாமல் புல் ஷாட்களை ஆடினார். ஸ்மித் தனது 138 ரன்களில் 17 பவுண்டரிகளை விளாச ஜோ பர்ன்ஸ் தனதுஜ் 170 ரன்களில் 20 பவுண்டரிகள் அடித்தார்.

கவாஜா முன்னதாக 24 ரன்களில் டிரெண்ட் போல்ட் பந்தில் மெக்கல்லம்மின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார். அதன் பிறகு பர்ன்ஸ், ஸ்மித் சில கடுமையான ஓவர்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. மேட் ஹென்றி பந்தில் பர்ன்ஸ் ஒரு முறை பவுல்டு ஆகியிருப்பார், ஆடாமல் விட்ட அந்தப் பந்து நூலிழையில் ஸ்டம்ப்பைத் தவறவிட்டது.

நன்றாக இருவரும் ஆடி வந்த நிலையில் ஆட்டம் முடியும் தறுவாயில் பர்ன்ஸ், ஸ்மித் இருவரும் ஒரேமாதிரியாக பவுன்சரை ஹூக் செய்து ஆட்டமிழந்தனர். இருவருமே மார்டின் கப்தில் கேட்சிற்கு வாக்னரிடம் வீழ்ந்தனர். நியூஸிலாந்து தரப்பில் போல்ட், வாக்னர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

SCROLL FOR NEXT