'தலைசிறந்த பவுலரான ஹர்பஜன் சிங்கை வசதிக்கேற்ப எடுப்பதும் தவிர்ப்பதும் நல்ல முன்மாதிரியை அமைப்பதல்ல', என்று பாகிஸ்தான் தூஸ்ரா புகழ் முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் கருதுகிறார்.
இது குறித்து சக்லைன் முஷ்டாக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்திய அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் ஹர்பஜன் சிங்கை நடத்தும் விதம் சரியாக இல்லை என்றே நான் அஞ்சுகிறேன். அவர் உலகத்தரம் வாய்ந்த பவுலராகவே இன்றும் திகழ்கிறார். அஸ்வின் எழுச்சியுற்றுள்ளார் என்பதற்காக ஹர்பஜன் சிங்கை ஓரங்கட்டுவதோ அவருக்கு கடும் நெருக்கடிகள் கொடுக்கப்படுவதோ சரியாக இல்லை.
அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து கவனித்துப்பாருங்கள். அதன் பிறகு 3 முறை முட்டி மோதி வந்துள்ளார். அதாவது தேவைப்படும் போது அவரைத் தேர்வு செய்வது, தேவை முடிந்த பிறகு அவரை ஓரங்கட்டுவது என்பதாகத்தான் அவர் நடத்தப்பட்டுள்ளார். எனவே அவர் மீது இத்தகைய நெருக்கடியை சுமத்துவதன் மூலம் அவரது கடந்த கால சாதனைகளை மறுத்து ஓரங்கட்டி விட்டீர்கள்.
ஆனால், உண்மையில் என்ன செய்திருக்க வேண்டுமெனில், அவரது பந்து வீச்சு சரிவடையும் போது அவருக்கு ஒரு சிறிய இடைவெளி கொடுத்து பிறகு மீண்டும் அணிக்குள் எடுத்திருக்க வேண்டும். அவர்தான் முதல் தெரிவு ஸ்பின்னராக இருக்க வேண்டும், அஸ்வின் அவருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும். ஆனால் மாறாக அவர் மீது சுய சந்தேகத்தை ஏற்படுத்தி விட்டு தற்போது 3-வது, 4-வது தெரிவாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பாகிஸ்தானுடனான எனது 10 ஆண்டு அனுபவத்தில், ஒரு வீரர் மீண்டும் அணிக்குள் வரும்போது ஃபார்ம் அல்லது காயம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்படுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் 2-3 போட்டிகளுக்குத்தான் மீண்டும் வரும் வீரர் திணறுவார், தொடர்ந்து வாய்ப்பளித்தால் அவர் தனது பார்மை மீட்டுக் கொள்வார்.
ஹர்பஜன் (பாஜி) 100% திறமையுடன் இருந்தாலும் அவரால் சரியாக ஆட முடியாமல் போக நீங்கள்தான் காரணம், அவர் தன்னையே 4ம் நிலை மாற்று வீச்சாளராக நினைக்க வைத்துள்ளீர்கள். கடைசியில் வீரரும் மனிதர்தானே, எனவே அவருக்கும் உணர்ச்சிகள் இருக்கும். நல்ல ஆட்டம் உணர்ச்சியை செலுத்தக் கூடியது. மன ரீதியாக நிம்மதியாக இருக்க விட்டாலே அவரது பந்து வீச்சு வரைபடம் உயர்ந்திருக்கும்.
அஸ்வின் பற்றி...
நேதன் லயன், மொயீன் அலி இன்னும் நிறைய நிரூபிக்க வேண்டியதுள்ளது, ஆனால் அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த சிறந்த வீச்சாளர், அதாவது இன்று அவர்தான் சிறந்த வீச்சாளர். அவரது அணுகுமுறை நன்றாக உள்ளது, அவர் மேலும் வளர்ச்சியுற வாழ்த்துகிறேன்.
அவர் துணைக்கண்டங்களில் பேட்ஸ்மென்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார், ஆனால் அயல்நாடுகளிலும் அவரால் சிறப்பாக வீசக்கூடிய திறமை உள்ளது.
எனவே நிலைமைகளை வைத்துப் பார்க்கும் போது இந்தியாவில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் வீழ்த்த முடிகிறது என்றால் ஆஸ்திரேலியாவில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஆஸ்திரேலிய பிட்ச்களில் ஸ்பின்னர்களுக்கான திட்டம் கேப்டன்களிடத்தில் மாறுபடும்.
ஆஸ்திரேலியா போன்ற அயல்நாடுகளில் ஸ்பின்னர்கள் 4-வது தெரிவாகவே பார்க்கப்படுவர். குறைந்த ஓவர்களையே வீசுவர்.
இவ்வாறு கூறினார் சக்லைன் முஷ்டாக்.