இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினும், வேகப்பந்துவீச்சாளர் ஷமியும் இல்லாத நிலையில், இங்கிலாந்து அணி ஓவல் டெஸ்ட்டில் எளிதாக வெற்றி பெறும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இன்று கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்துள்ளது இங்கிலாந்து அணி. இன்னும் 291 ரன்கள் சேர்த்தால் வெற்றி பெறும். கைவசம் 10 விக்கெட்டுகள் உள்ளன.
ஆனால், ஓவல் மைதானத்தில் இதுவரை 263 ரன்களை 2-வது இன்னிங்ஸில் கடந்த 1902-ம் ஆண்டு சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாகும். ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை கடைசியாக இங்கு 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை இங்கிலாந்து சேஸிங் செய்ததே அதிகபட்சமாகும். 368 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் அது வரலாற்று சேஸிங்காகக் கருதப்படும்.
கடைசி நாளான இன்று ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதே நேரம், இந்திய அணி தொடக்கத்திலேயே 3 அல்லது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆட்டம் பரபரப்பாகச் செல்லும் எனத் தெரிவிக்கின்றனர்.
அதே நேரம் இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் அஸ்வின் போன்ற அனுபவமான சுழற்பந்துவீச்சாளர் இருந்தால், விக்கெட்டுகளைச் சீரான இடைவெளியில் வீழ்த்துவார். இந்தக் கருத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் தெரிவித்துள்ளார்.
மைக் ஆதர்டன் ஸ்கை ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் என நம்புகிறேன். ஏனென்றால், ஆடுகளம் பந்துவீச்சுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைக்காது. தட்டையாக இருப்பதால், பெரிதாக எந்த மாயாஜாலமும் நடந்துவிடாது.
அதிலும் இப்போதுள்ள இந்தியப் பந்துவீச்சு வரிசையால் பெரிதாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இந்திய அணியில் அஸ்வின் இல்லை, முகமது ஷமி கிடையாது, இசாந்த் சர்மா இல்லை. முதல் இன்னிங்ஸில் பும்ரா மட்டும் சிறப்பாகப் பந்துவீசினார்.
ரவீந்திர ஜடேஜாவால் இன்று ஒருநாளில் பெரிதாக என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? ஜடேஜா ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்க வேண்டுமே”.
இவ்வாறு மைக்கேல் ஆதர்டன் தெரிவித்துள்ளார்
மைக்கேல் ஆதர்டன் கருத்தைத்தான் மைக்கேல் ஹோல்டிங்கும் ஆதரித்துள்ளார். ஹோல்டிங் கூறுகையில், “ஓவல் ஆடுகளத்தில் கடைசி நாளில் பந்துவீச்சாளர்களுக்குப் பெரிதாக உதவும் என என்னால் கூற முடியாது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கூட இந்திய பேட்ஸ்மேன்களுக்குப் பெரிதாக எந்தச் சிக்கலும் ஏற்படுத்த முடியவில்லையே. ஆதலால், இந்தியப் பந்துவீச்சாளர்கள் பெரிதாக தாக்கத்தையும் ஏற்படுத்துவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஜடேஜாவைப் பற்றி எனக்குத் தெரியாது. அஸ்வின் இருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறக்கூடும்” எனத் தெரிவித்தார்.