லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 368 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணியால் சேஸிங் செய்ய முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கும், இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இந்திய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 466 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
368 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் வரலாற்று சேஸிங்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்து 291 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஹசீப் ஹமீது 43ரன்களுடனும், ரோரி பர்ன்ஸ்31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் கைவசம் தற்போது 10 விக்கெட்டுகள் உள்ளன, 90 ஓவர்கள் இருக்கிறது 291 ரன்கள்தான் தேவைப்படுவதால் 4-வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டெஸ்டில் வெற்றி பெறும் அணி முன்னிலை வகிக்கும் என்பதால், இரு அணிகளின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து சேஸிங் செய்யுமா, அல்லது பந்துவீச்சால் இங்கிலாந்து அணியை இந்திய அணி சுருட்டிவிடுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஆனால், ஓவல் மைதான ஆடுகளம் 2-வது இன்னிங்ஸில் கடைசி நாள் பேட்ஸ்மேன்களுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பது தெரியவந்துள்ளது. அதனால்தான் நேற்று மாலையிலிலிருந்தே ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இல்லை, பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கிறது. ஆதலால், இங்கிலாந்து அணி இன்று அதிரடி ஆட்டத்தை கையாண்டு வெற்றி பெறவே முயற்சிக்கும்.
இங்கிலாந்தின் ஸ்கை ஸ்போர்ட்ஸ் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், இங்கிலாந்து அணி 4-வது இன்னிங்ஸ் இலக்கை எளிதாக சேஸிங் செய்யலாம். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும். அதிலும் குறிப்பாக இந்திய அணியில் அஷ்வின் இல்லாதது இங்கிலாந்து அணிக்கு சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டுள்ளது.
அதேநேரத்தில் காலை நேரத்தில் புதிய பந்தில் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்துவிட்டால், இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின் போக்கு மாறும். இல்லாவிட்டால் சேஸிங் செய்யவே முயலும். இங்கிலாந்து அணியில் இன்னும் 7 வலுவான பேட்ஸ்மேன்கள் இருப்பதால், அதிரடியாக ஸ்கோர் செய்வதைப் பற்றி கவலைப்படாது, டி20 இன்னிங்ஸ் போன்று யாரேனும் இரு வீரர்கள் விளையாடினாலே மனரீதியாக இந்திய வீரர்கள் குலைந்துவிடுவார்கள்.
டிபென்ஸ் ப்ளேயை இங்கிலாந்து அணி கையில் எடுக்காமல், இந்திய அணிக்கு எதிரான மைன்ட் கேம் விளையாடவே அதிகமாக முயலும். அதாவது, இந்திய பந்துவீச்சாளர்களின் மன உறுதியை குலைக்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை ஆடுவது, ஏதாவது குறிப்பிட்ட பந்துவீச்சாளரை குறிவைத்து பேட் செய்து அடித்து ஆடி நம்பிக்கை இழக்க வைப்பார்கள்.
ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை கடைசியாக இங்கு 1902-ம் ஆண்டு ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 விக்கெட் இழப்புக்கு 263 ரன்களை இங்கிலாந்து சேஸிங் செய்ததே அதிகபட்சமாகும். 368 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் அது வரலாற்று சேஸிங்காக கருதப்படும்.
அதன்பின் கடந்த 1963-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் அணி 253 ரன்கள் சேஸிங் செய்து வெற்றி பெற்றது.
கடந்த 1972-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 242 ரன்களை சேஸிங் செய்தது.
கடந்த 1988-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 225 ரன்களை மே.இ.தீவுகள் அணி சேஸிங் செய்து வாகை சூடியது. கடைசியாக1994-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 204 ரன்களை தென் ஆப்பிரிக்க அணி சேஸிங் செய்தது. இவைதான் ஓவல் மைதானத்தின் அதிகபட்ச சேஸிங்காகும்.
ஒருவேளை 368 ரன்களை இங்கிலாந்து அணி சேஸிங் செய்தால் அது வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படும். ஓவல் மைதானத்தில் தற்போது நடக்கும் இந்த போட்டியைத் தவிர்த்து கடந்த 10 போட்டிகளை எடுத்துக்கொண்டால், அதில் 5 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி வென்றுள்ளது, 4 போட்டியில் தோல்வி அடைந்து, ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. அதிலும் கடந்த 3 போட்டிகளாக இங்கிலாந்து அணி ஓவல் மைதானத்தில் வென்றுள்ளது. ஓவல் மைதானத்தில்நடந்த கடந்த 9 போட்டிகளிலும் முடிவு கிடைத்துள்ளது. இதில் 2 போட்டிகளில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது.
அதேநேரம் இந்திய அணிக்கும் சாதகமான ஒரு அம்சம் இருக்கிறது. இந்திய அணி இதுவரை குறைந்தபட்சம் 4-வது இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்து எதிரணியை பந்துவீச்சில் சுருட்டி 34 முறை வென்றுள்ளது, 15 முறை டிரா செய்துள்ளது. கடைசியாக 1977-ம் ஆண்டு பெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 339 ரன்களை சேஸிங் செய்துள்ளது இந்திய அணி.