டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. இந்தப் போட்டியில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் முதல்முறையாக 19 பதக்கங்களைப் பெற்று இந்தியக் குழுவினர் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24-ம்தேதி தொடங்கின. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் 9 விளையாட்டுகளில் பங்கேற்றனர். சுமார் 2 வார காலம் நடந்த பாராலிம்பிக், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நேற்று நிறைவடைந்தது.
நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற வீராங்கனை அவனி லேகாரா ஏந்திச் சென்றார். அவருடன் இந்தியாசார்பில் 11 பேர் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
கடைசி நாளான நேற்று இந்தியா 2 பதக்கங்களை கைப்பற்றியது. ஆடவருக்கான பாட்மிண்டன் எஸ்ஹெச் 6 ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 21-17, 16-21, 21-17என்ற செட் கணக்கில் ஹாங்காங்கின் மான் ஹை சூவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். அதேவேளையில் எஸ்எல் 4 பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் 21-15, 17-21,15-21 என்ற செட் கணக்கில் போராடி பிரான்ஸின் லூகாஸ் மசூரிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். சுஹாஸ் யதிராஜ், நொய்டா மாவட்ட நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் பாராலிம்பிக் தொடரில் இந்தியா ஒட்டுமொத்தமாக 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் 19 பதக்கங்கள் பெற்று பதக்கப் பட்டியலில் 24-வதுஇடம் பிடித்தது. பாராலிம்பிக் வரலாற்றில் 1968 முதல் இந்தியா பங்கேற்று வருகிறது. கடந்த 2016-ம்ஆண்டு பாராலிம்பிக் வரை மொத்தமாக 12 பதக்கங்கள் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால், முதல்முறையாக டோக்கியோவில் இம்முறை 19 பதக்கங்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு அதிகபட்சமாக 1984-ம் ஆண்டு நியூயார்க் பாராலிம்பிக் மற்றும் 2016-ம் ஆண்டு ரியோ பாராலிம்பிக்கில் தலா 4 பதக்கங்கள் பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து தற்போது முதல்முறையாக இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர் இந்தியக் குழுவினர்.
இந்தியா சார்பில் துப்பாக்கி சுடுதலில் அவனி லேகாரா, பாட்மிண்டனில் பிரமோத் பகத், கிருஷ்ணா நாகர், ஈட்டி எறிதலில் சுமித் அண்டில், துப்பாக்கி சுடுதலில்மணீஷ் நார்வால் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர். டேபிள் டென்னிஸில் பவினாபென் படேல், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதனா, வட்டு எறிதலில் யோகேஷ் கதுனியா, உயரம் தாண்டுதலில் நிஷாத் குமார், மாரியப்பன் தங்கவேலு, பிரவீன் குமார், ஈட்டி எறிதலில் தேவேந்திர ஜஜாரியா, பாட்மிண்டனில் சுஹாஸ் யதிராஜ் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சுடுதலில் அவனி லேகாரா, வில்வித்தையில் ஹர்விந்தர் சிங், உயரம் தாண்டுதலில் சரத் குமார், ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார், பாட்மிண்டனில் மனோஜ் சர்கார், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜ் அதனா ஆகியோர் வெண்கலப் பதக்கம் பெற்றனர்.
பதக்கப் பட்டியலில் 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 207 பதக்கங்கள் குவித்து சீனா முதலிடம் பிடித்தது. 41 தங்கம், 38 வெள்ளி, 45 வெண்கலம் என 124 பதக்கங்களுடன் இங்கிலாந்து 2-வது இடமும், 37 தங்கம், 36 வெள்ளி, 31 வெண்கலம் என 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடமும் பிடித்தன.
நினைவில் இருக்கும்
டோக்கியோ பாராலிம்பிக்கில் 19 பதக்கங்கள் குவித்த இந்திய குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘இந்திய விளையாட்டு வரலாற்றில், டோக்கியோ பாராலிம்பிக்ஸுக்கு எப்போதும் சிறப்பான இடம் உள்ளது. இந்த விளையாட்டுப் போட்டி, ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் இருக்கும். பல தலைமுறை விளையாட்டுவீரர்கள், தங்கள் விளையாட்டுகளை தொடர ஊக்குவிக்கும். நமதுகுழுவில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரும் சாம்பியன்தான். இந்தியா வென்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கங்கள், நமது மனதை மகிழ்ச்சியால் நிறைத்துள்ளன. வீரர்களுக்குதொடர்ந்து உற்சாகம் அளிக்கும் பயிற்சியாளர்கள், ஆதரவு அளிக்கும் ஊழியர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் குடும்பங்களை பாராட்ட விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.