இந்திய வீரர் பிரமோத் பாகத் இறுதி ஆட்டத்தில் விளையாடிய காட்சி | படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

பாராலிம்பிக்ஸ்: பாட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பாகத் தங்கம்; மனோஜுக்கு வெண்கலம்

பிடிஐ


டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோகத் பாகத் (எஸ்எல்3) தங்கப் பதக்கத்தையும், மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

டோக்கியாவில் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன, நாளையுடன் போட்டிகள் முடிவடைகின்றன.

இந்நிலையில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்திய வீரரும், உலகின் நம்பர் ஒன் வீரருமான பிரமோத் பாகத்தை எதிர்த்து பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தல் மோதினார்.

பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் டேனியல் பெத்தலை 21-14, 21-17 என்ற நேர்செட்களில் தோற்கடித்து இந்திய வீரர் பிரமோத் பாகத் தங்கப் பதக்கம் வென்றார். முதல் செட்டை 21 நிமிடங்களிலும், 2-வது செட்டை 24 நிமிடங்களிலும் பிரமோத் கைப்பற்றினார்.

வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் மனோஜ் சர்க்காரை எதிர்த்து களமிறங்கினார் ஜப்பான் வீரர் டாய்சுகே புஜிஹாரா. இந்த ஆட்டத்தில் புஜிஹராவை 22-20, 21-13 என்ற நேர் செட்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கத்தை மனோஜ் சர்க்கார் உறுதி செய்தார்.

இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவுக்கு இதுவரை 4 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி பாகத், பாலக் கோலி 21-3,21-15 என்ற செட்களில் இந்தோனேசிய ஜோடி சுசான்டோ ஹேரி, டிலா லீன் ரத்ரியிடம் தோல்வி அடைந்தனர். இந்திய ஜோடி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் நாளை மோதுகின்றனர்.

இதற்கிடையே எஸ்ஹெச்6 பிரிவில் பிரிட்டன் வீரர் கிறிஸ்டன் கூம்ப்ஸை 21-10, 21-11 என்ற செட்களில் வீழ்த்தி இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

SCROLL FOR NEXT