பந்துவீச முயன்று பேர்ஸ்டோ மீது மோதிய ஜார்வோ | படம் உதவி: ட்விட்டர். 
விளையாட்டு

ஓவல் ஆடுகளத்தில் அத்துமீறல்: போப்புக்கு பந்துவீச முயன்று பேர்ஸ்டோ மீது மோதிய யூடியூப் சேனல் உரிமையாளர் ஜார்வோ கைது

ஏஎன்ஐ

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி நடக்கும் ஓவல் மைதானத்துக்குள் நுழைந்து பந்துவீச முயன்ற யூடியூப் சேனல் உரிமையாளர் டேனியல் ஜார்விஸை போலீஸார் கைது செய்தனர்.

ஜார்வோ என்று அழைக்கப்படும் டேனியல் ஜார்விஸ் நடத்தும் யூடியூப் சேனலுக்கு 1.23 லட்சம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். ஜார்வோவின் நோக்கம் வீரர்களுக்குத் தொந்தரவு கொடுப்பது அல்ல, வீரர்களுக்கு வாழ்த்து சொல்வது. அவர்களுடன் உரையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான ஜார்வோ, கனடாவில் பிறந்தாலும் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இந்திய அணியின் தீவிர ரசிகரான ஜார்வோ கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் தவறாமல் வந்து, இதுபோன்று மைதானத்துக்குள் நுழைந்து ஏதாவது இடையூறு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 3 போட்டிகளில் ஒருமுறை இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்துகொண்டு களமிறங்கி ஃபீல்டிங் செட் செய்ய ஜார்வோ முயன்றார்.

மற்றொரு முறை இந்திய பேட்ஸ்மேன் போன்று பேட், ஹெல்மெட், ஆடை, முகக்கவசம் அணிந்து களமிறங்கி இந்திய வீரர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியவர் ஜார்வோ. கடந்த 3 போட்டிகளிலும் ஜார்வோவின் சேட்டை தொடர்ந்த நிலையில் நேற்று அவர் அத்துமீறியதையடுத்து போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் ஜார்வோ மைதானத்துக்குள் நுழைந்தபோதே காவலர்கள் பார்த்து விழிப்படைந்து அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், நேற்று அனைவரின் கண்களையும் மறைத்து ஆடுகளம் வரை ஜார்வோ வந்துவிட்டார்.

2-ம் நாள் ஆட்டம் நடந்து கொண்டிருந்தபோது, களத்தில் பேர்ஸ்டோ, போப் இருந்தனர். போப் பேட் செய்ய முயன்றபோது, திடீரென மைதானத்துக்குள் நுழைந்த ஜார்வோ போப்பிற்கு பந்துவீச முயன்று பேர்ஸ்டோ மீது மோதினார்.

அப்போது பேர்ஸ்டோவுக்கும், ஜார்வோவுக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து நடுவர் தடுத்து காவலர்களை அழைத்தார். இதனால் ஆட்டம் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. ஜார்வோ மைதானத்துக்குள் நுழைந்து செய்த ரகளையால், பார்வையாளர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர். இதையடுத்து, ஜார்வோவை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT