ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக்ஸ் நடைபெற்று வருகிறது. இதன் 9வது நாளான நேற்று பாட்மிண்டனில் கலப்பு அணிகள் எஸ்எல் 3- எஸ்யு 5 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத், பாலக் கோலி ஜோடி தங்களது முதல் சுற்றில் பிரான்ஸின் லூகாஸ்மசூர் மற்றும் ஃபாஸ்டின் நோயல்ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய ஜோடி 9-21, 21-15, 19-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
10 மீட்டர் ஏர் ரைபிள் புரோன்எஸ்ஹெச் 1 கலப்பு பிரிவில் இந்தியாவின் சித்தார்த்தா பாபு, தீபக், அவனி லேகாரா ஜோடி இறுதி சுற்றுக்கு தகுதி பெறத் தவறியது. நீச்சலில் ஆடவருக்கான 100 மீட்டர் பிரீஸ்ட் ஸ்டிரோக் எஸ்பி 7 பிரிவில் இந்தியாவின் சுயாஷ்ஜாதவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையரில் எஸ்யு 5 பிரிவில் இந்தியாவின் பாலக் கோலி தனது முதல் சுற்று ஆட்டத்தில் 4-21, 7-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் அயோகா சுசுகியிடம் தோல்வியடைந்தார். மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையரில் எஸ்எல் 3 பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரமோத் பகத், சகநாட்டைச் சேர்ந்த மனோஜ் சர்காரை எதிர்கொண்டார். இதில் பிரமோத் பகத் 21-10, 21-23 21-9 என்ற செட்டில் வெற்றி பெற்றார்.
ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் ரஷ்யா பாராலிம்பிக் குழுவின் மூசா டைமசோவ் 35.42 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். செர்பியாவின் ஜெல்ஜ்கோ டிமிட்ரிஜெவிக் 35.29 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், சுலோவேக்கியாவின் மரியன் குரேஜா 30.66 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் பெற்றனர். இந்திய வீரர்களான அமித் குமார் சரோகா (27.77 மீட்டர்), தரம்பீர் நைன் (25.59 மீட்டர்) முறையே 5-வது இடமும், 8-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர்.