விளையாட்டு

பாகிஸ்தான் வீரருக்கு ஆதரவு; உங்கள் பிரச்சாரத்துக்கு என்னைப் பயன்படுத்தாதீர்கள்: நீரஜ் சோப்ரா காட்டம்

செய்திப்பிரிவு

உங்கள் பிரச்சாரத்துக்கு என்னைப் பயன்படுத்தாதீர்கள் என்று ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா காட்டமாக தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். போட்டியின் முதல் சுற்றில் நீரவ் சோப்ரா ஈட்டி ஏறியும்போது அவரது ஈட்டியை காணாமல் தேடியதாகவும், பின்னர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் அதனை வைத்திருந்ததால் அவரிடம் பெற்று தனது போட்டியை தொடர்ந்ததாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நீரஜ் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து போட்டியின்போது மற்றவர்களது ஈட்டியை எப்படி வைத்திருக்க முடியும் என்று பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரருக்கு தனது ஆதரவை நீரஜ் சோப்ரா வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், “ உங்களது பிரச்சாரத்துக்காக என்னையும், எனது கருத்துகளை பயன்படுத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். விளையாட்டு எங்களுக்கு ஒற்றுமையை கற்று கொடுத்திருக்கிறது.

என்னுடைய சமீபத்திய கருத்துக்கு சிலரிடமிருந்து வரும் கருத்துகள் என்னை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. நீங்கள் ஒரு கருத்தை தெரிவிக்கும்போது அந்த விளையாட்டின் நெறிமுறையை தெரிந்து வைத்திருப்பது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT