ஹாக்கிப் போட்டியில் 5 மீட்டர் சுற்றளவுக்குள் அனுமதிக்கப்படும் ப்ரீ ஹிட் தொடர்பான விதியில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி சர்க்கிள் பகுதியில் 5 மீட்டர் தூரத்திலிருந்து ப்ரீ ஹிட் விதி மூலம் பந்து அடிக்கப்பட்ட பிறகு, அது 5 மீட்டர் தூரத்தைக் கடக்கும் வரையிலோ அல்லது எதிரணியினர் அந்தப் பந்தை தடுத்து ஆடுவதற்கு முன்பாகவோ அதை சக அணியின் ஆட்டக்காரர்கள் கையாளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ப்ரீ ஹிட் அடிக்கப்பட்டதும் அதே அணியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டக்காரர் கூடவே ஓடிச் சென்று பந்தை திசை திருப்பி அனுப்பும் நடைமுறை முடிவுக்கு வருகிறது. மேலும் மற்றொரு விதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது களத்தில் 23 மீட்டர் தூரத்தில் ப்ரீ ஹிட்டுக்கு அனுமதி கிடைக்கும்போது பந்தை அடிப்பவர் தவிர்த்து பிற வீரர்கள் அனைவரும் 5 மீட்டர் தூரம் தள்ளி நிற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.