விளையாட்டு

நியூஸிலாந்து வேகத்தில் மடிந்து விழுந்த ஆஸி.- 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

செய்திப்பிரிவு

நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது. நியூஸிலாந்தின் வேகப் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸி. வீரர்கள் திணறி வீழ்ந்தனர்.

308 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸி. 10 ஓவர்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. மார்ஷ், ஸ்மித், வார்னர், மேக்ஸ்வெல் என நட்சத்திர வீரர்கள் ஒவ்வொருவராக, நியூஸிலாந்தின் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

நியூஸி. பந்துவீச்சாளர்கள் போல்ட், ஹென்றி இருவரும் தங்கள் வேகத்தாலும் ஸ்விங்காலும் ஆஸியை திக்குமுக்காடச் செய்தனர். 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வேட், ஃபால்க்னர் இருவர் மட்டும் சற்று நிதானித்து ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரது பார்ட்னர்ஷிப்பில் 79 ரன்கள் வந்தாலும், ஆஸி.யின் தோல்வி ஏறக்குறைய 10 ஓவர்களுக்குள்ளாகவே உறுதியானது.

38 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது வேட் ஆட்டமிழ்ந்தார், அடுத்த ஓவரிலேயே ஃபால்க்னர் 36 ரன்களுக்கு வீழ்ந்தார். முடிவில் 24.2 ஓவர்களில் ஆஸி. வெறும் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி கண்டது. போல்ட், ஹென்றி இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். சாண்ட்னர் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸி. அணி நியூஸிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. கப்டில், மெக்கல்லம் இருவரும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். தொடர்ந்து ஆட வந்த வில்லியம்ஸன் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தாலும், நிக்கோல்ஸ் 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் சீரான ரன் குவிப்பால் நியூஸிலாந்து அணி 50 ஓவர்களில் 307 ரன்களை குவித்து 8 விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக கப்டில் 90 ரன்கள் எடுத்திருந்தார்.

3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் 2வது போட்டி வெல்லிங்டனில் பிப்ரவரி 6-ஆம் தேதி நடக்கிறது.

SCROLL FOR NEXT