லார்ட்ஸ் மண்ணில் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர் கே.எல்.ராகுல் |படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

லார்ட்ஸ் மைதானமும் இந்திய அணியும்: சதம் அடித்த இந்திய வீரர்கள்; ஒருவர் மட்டுமே 3 முறை

க.போத்திராஜ்


கிரிக்கெட் உலகின் மெக்கா என்று வர்ணிக்கபடுவது லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம்.இங்கு கிரிக்கெட் விளையாடுவது ஒவ்வொரு வீரரின் கனவாகும், அதிலும் சதம் அடிப்பது என்பது மறக்கமுடியாத நினைவாகவும், வரலாற்றில் பொறிக்கப்படும்.

பாரம்பரியமும், புகழும் கொண்ட லண்டன் லார்ட்ஸ் மைதனத்தில் 1932ம் ஆண்டுவரை இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், என கிரி்க்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதுவரை இங்கிலாந்து அணியுடன் 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. அதில் 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணி வென்றுள்ளது.

கடந்த 1932-ம் ஆண்டிலிருந்து விளையாடிவரும் இந்திய அணி 1986-ம் ஆண்டுமுன்னாள் கேப்டன் கபில் தேவ் தலைமையி்ல்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றது. ஏறக்குறைய 54 ஆண்டுகளில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த இந்திய அணி 11-வது போட்டியில் முதல் வெற்றி பெற்றது.

திலீப் வெங்கர்சகாரின் அற்புதமான சதம் மற்றும் கபில்தேவ், சேத்தன் சர்மா, மணிந்தர் சிங், பின்னி ஆகியோரின் பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தது.

அந்த வெற்றிக்கு பிறகு சுமார் 28 ஆண்டுகாலமாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறாமலே இருந்தது. அதன்பின் கடந்த 2014ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி 2-வது வெற்றியைப் பெற்றது. ரஹானேயின் சதம், இசாந்த் சர்மா , புவனேஷ் குமாரின் பந்துவீச்சு ஆகியவற்றால் இந்திய அணி 2-வது வெற்றியைப் பெற்றது.

கபில்தேவ், எம்.எஸ்.தோனியின் தலைமை மட்டுமே இதுவரை இந்தியாவிற்காக லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு கோலி தலைமையில் இந்திய அணி சென்று இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள்வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

லார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை இந்திய வீரர்கள் 9 பேர் சதம் அடித்திருந்த நிலையில் 10-வது வீரராக ராகுல் நேற்று சதம் அடித்தார்.

1. லார்ட்ஸ் மைதானத்தில் முதன்முதலில் இந்தியாவின் சார்பில் சதம் அடித்தவர் வினு மன்டக். கடந்த 1952-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 152 ரன்கள் சேர்த்தார்.

2. இந்திய வீரர்களில் லார்ட்ஸ் மைதானத்தில் 3 முறை சதம் அடித்தவர் என்ற பெருமை திலீப் வெங்சர்காருக்கே சேரும். கடந்த 1979ம் ஆண்டில் 103 ரன்கள், 1982ம் ஆண்டில் 157 ரன்கள், 1986ம் ஆண்டில் 126 ரன்கள் என 3 முறை சதம் அடித்துள்ளார்.

3. இந்திய அணியின் குண்டப்பா விஸ்நாத் கடந்த 1979ம் ஆண்டில் சதம் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 113 ரன்கள் சேர்த்தார் விஸ்வநாத்.

4. கடந்த 1990-ம் ஆண்டு இங்கிலாந்து பயணத்தின் போது சதம் அடித்தவர் ரவி சாஸ்திரி. இந்திய அணி்க்கு பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி அப்போது 100 ரன்கள் இந்த லார்ட்ஸ் மைதானத்தில்தான் அடித்தார்.

5. இந்திய அணியின் முன்னாள்கேப்டன் முகமது அசாருதீன் லாட்ர்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளார். 1990ம் ஆண்டு பயணத்தின் போது, 121 ரன்கள் சேர்த்து அசாருதீன் முத்திரை பதித்துள்ளார்.

6. இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ்கங்குலி இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகி, தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே லார்ட்ஸ் மண்ணில் 131 ரன்களைப் பதிவு செய்தார்.

7. இந்திய அணியின் பந்துவீ்ச்சாளராக அறிமுகமாகி, ஆல்ரவுண்டராக ஜொலித்த அஜித் அகர்கரும் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டில் 109 ரன்கள் சேர்த்து அகர்கர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

8. இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவரும், தற்போதுள்ள இந்திய அணி வீரர்களுக்கு துரோனாச்சாரியாராக இருக்கும் ராகுல் திராவிட் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளார். 2011ம் ஆண்டு பயணத்தில் 103 ரன்களை அடித்து திராவிட் முத்திரை பதித்துள்ளார்.

9. இந்திய வீரர் ரஹானே கடந்த 2014ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்துள்ளார். அந்தப் போட்டியில் 103 ரன்களை ரஹானே குவித்தார்.

ஆனால், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், கிரிக்கெட் கடவுள் எனக் கூறப்படும் சச்சின் டெண்டுல்கர், தற்போதைய கேப்டன் கோலி, வெற்றி்க் கேப்டனாக வலம் வந்த தோனி ஆகிய 3 பேரும் இந்த மண்ணில் சதம் அடிக்காதது துரதிர்ஷ்டத்தின் உச்சமாகும்.

SCROLL FOR NEXT