சென்னைக்கு வந்து சேர்ந்த சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி | படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

‘லயன் என்ட்ரி’: சென்னை வந்தார் தோனி: வரும் 13-ம் தேதி ஐக்கியஅமீரகம் புறப்படுகிறது சிஎஸ்கே

பிடிஐ


ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் ஐபிஎல் டி20 தொடருக்குச் செல்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி நேற்று சென்னை வந்தார்.

சிஎஸ்கே அணிக் குழுவினர் அனைவரும் சென்னையிலிருந்துவரும் 13ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் செல்வார்கள் எனத் தெரிகிறது.

ஐபிஎல் அணிகளான கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சிஎஸ்கே அணி வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் மட்டுமே நடந்து முடிந்திருந்தன.

இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான போட்டி அட்டவணை மற்றும் தேதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

ஐக்கியஅரபு அமீரகத்தில் 2-வது கட்ட ஐபிஎல் டி20 லீக் ஆட்டங்கள் செப்டம்பர் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 27 நாட்கள் நடக்கும்போட்டித் தொடரில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரே நாளில் இரு ஆட்டங்கள் 7 முறை நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் மோதுகின்றன.

இந்தத் தொடரில் பங்ேகற்பதற்காக சிஎஸ்கே அணியினர் அனைவரும் சென்னைக்கு வந்துசேரத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமைநிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் “ இந்திய அணியில் உள்ள சிஎஸ்கே அணி வீரர்களும் வரும் 13-ம் ேததி ஐக்கிய அரபு அமீரகம் செல்லக்கூடும். சென்னையில் எந்தப் பயிற்சியும் வீரர்கள் மேற்கொள்ளவில்லை.” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னைக்கு நேற்று வந்து சேர்ந்த தோனியின் புகைப்படத்தை சிஎஸ்கே ட்வி்ட்டரில் பகிர்ந்ததற்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். லயன் என்ட்ரி என்றதலைப்பில் தோனியின் புகைப்படத்தை சிஎஸ்கே நிர்வாகம் பகிர்ந்துள்ளது, இந்த புகைப்படத்துக்குப்பின் சமூகவலைத்தளங்களில் மீண்டும் ஐபிஎல், தோனி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

SCROLL FOR NEXT