எனது கிராமம் மூன்று ஒலிம்பிக் வீரர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. அதனால் எனது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் நிச்சயம் தேவை என்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தாஹியா தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவி தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, “எனது கிராமம் மூன்று ஒலிம்பிக் வீரர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. எனவே, எனது கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் தேவை. எனது கிராமத்திற்கு எது முதலில் தேவை என்று என்னால் கூற முடியாது. எனது கிராமத்திற்கு அனைத்து வசதிகளும் தேவை. விளையாட்டு வசதிகளுடன் கூடிய தரமான பள்ளிகள் என அனைத்தும் தேவை” என்று தெரிவித்தார்.
மேலும், ''தங்கப் பதக்கம் வெல்வதே எனது இலக்காக இருந்தது. வெள்ளி வென்றது ஏமாற்றம்தான். எனினும் எனது வெள்ளிப் பதக்கத்துடன் நான் நிற்கப் போவதில்லை. நான் திறன்களை வளர்த்துக்கொண்டு அடுத்த ஒலிம்பிக் போட்டிக்குத் தயார் ஆவேன்'' என்றும் ரவி தாஹியா கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரவி தாஹியா, ஹரியாணாவின் நாஹ்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்.
முன்னாள் வீரர்களான மகாவீர் சிங், அமித் தாஹியா உள்ளிவர்களும் நாஹ்ரி கிராமத்திலிருந்து இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.