விளையாட்டு

டி 20 உலகக்கோப்பையில் விலகினால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்கும்: வாரிய தலைவர் தகவல்

பிடிஐ

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறும் டி 20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்காவிட்டால் பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதிக்கும் என்று அந்நாட்டு வாரிய தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பாகிஸ் தான் அணியை அனுப்புவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் பேசினேன்.

ஆனால் இது வரை அரசு அனுமதி வழங்கவில்லை. அதேவேளையில் இந்தியாவில் உள்ள நிலைமையை மீளாய்வு செய்து வருவதாக பிரதமர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியை புறக்கணித்தால் ஐசிசிக்கு அபராதம் கட்ட வேண்டும் என்பதை தெரிவித்துள்ளோம். அரசின் ஆலோசனை மற்றும் அனுமதி கிடைத்த பிறகு அணியை அனுப்பி வைப்போம் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கும் ஆட்டங்களை பொதுவான இடத்தில் நடத்த வேண்டும் என பாக். வாரியம் கடந்த சில வாரங்களுக்கு முன் ஐசிசிக்கு கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT