விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா 

செய்திப்பிரிவு

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் திருவிழாவில் ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.

முன்னதாக, நேற்று அரை இறுதியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா 5-12என்ற கணக்கில் அஜர்பைஜானின் ஹாஜி அலியேவிடம் தோல்வியடைந்தார். அரை இறுதியில் தோல்வியடைந்த பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கத்துக்கான மோதலில் இன்று களம் கண்டார்.

கசகஸ்தானின் தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொண்ட அவர் 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி கண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே பஜ்ரங்கின் கை ஓங்கியிருந்தது. அவரது லாவகமான பிடிகளில் இருந்து தப்பிக்க முடியாமல் கசகஸ்தான் வீரர் சுருண்டார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது 6வது பதக்கம். மல்யுத்தப் போட்டியில் இது இரண்டாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ஆடவருக்கான 57 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிச் சுற்றில் இந்தியாவின் ரவி குமார் தஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்யாவின் ஜாவூர் உகுவேவிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ஒலிம்பிக் வரலாற்றில் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரவி குமார் தஹியா. இதற்கு முன்னர்கடந்த 2012-ம் ஆண்டு லண்டன்ஒலிம்பிக்கில் சுஷில் குமார்வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில் தற்போது, ஆடவருக்கான மல்யுத்தத்தில் 65 கிலோ எடை பிரிவுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் பஜ்ரங் புனியா.

தந்தையின் நம்பிக்கை வீண்போகவில்லை..

இந்தப் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் பஜ்ரங் புனியாவின் தந்தை பேட்டியளித்திருந்தார். அப்போது அவர், "இன்று காலை நான் எனது மகனுடன் பேசினேன். அப்போது அவரிடம், நான் உனது மூன்று போட்டிகளையும் பார்த்தேன். போட்டிகளில் உனது வழக்கமான ஆட்டம் வெளிப்படவில்லை என்று தெரிவித்தார். எதிர்ப்பாட்டம் சரியில்லை என்று கூறினேன். எனது மகன் நிச்சயம் தோற்றுப் போக மாட்டார். அவரிடம், நீ வெறும் கையுடன் வரக்கூடாது. இன்று உனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்து என்று கூறியுள்ளேன்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பாராட்டு:

பஜ்ரங் புனியாவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், டோக்கியோவிலிருந்து ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி. பஜ்ரங் புனியாவுக்கு வாழ்த்துகள். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தி உள்ளீர்கள். மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT