விளையாட்டு

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம் ஏன்? ட்விட்டரில் பிரதமர் மோடி விளக்கம்

செய்திப்பிரிவு

விளையாட்டுத் துறையில் சாதிப்போருக்கு இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த விருதின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனிமேல் இந்த விருது மேஜர் த்யான் சந்த் கேல் ரத்னா விருது என்றே அழைக்கப்படும். இதனை பிரதமர் மோடி தனது ட்விட்டர் வாயிலாக அறிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி சாதனையாளரான தியான் சந்தை கவுரவிக்கும் வகையில் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய குடிமக்கள் பலரும் என்னிடம் ஓர் கோரிக்கை முன்வைத்தனர். கேல் ரத்னா விருதை மேஜர் த்யான் சந்த் பெயரில் வழங்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தைத் தெரிவித்தனர்.

அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கேல் ரத்னா விருது இனி வருங்காலங்களில் மேஜர் த்யான் சந்த் பெயரில் வழங்கப்படும். ஜெய்ஹிந்த்.
இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று தேசத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது. அதேபோல் மகளிர் ஹாக்கி அணியும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி வரை முன்னேறியது. அந்தப் போட்டியில் தோல்வியடைந்தாலும் கூட இந்திய மகளிர் ஹாக்கி அணியின் திறன் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றத்துக்கு முன்னதாக இன்று காலையில் பிரதமர் மோடி இந்திய ஹாக்கி அணியைப் பாராட்டிப் பதிவு செய்தார். அதில், "இந்திய மகளிர், ஆடவர் ஹாக்கி அணியின் செயல்திறன் அளப்பரியது. இரு அணிகளும் இந்திய மக்களின் எதிர்பார்ப்பை எட்டியுள்ளது. இதனால், ஹாக்கி மீது மக்களுக்கு புதிய அபிமானம் உண்டாகியுள்ளது. இது எதிர்காலத்துக்கான ஒரு நேர்மறை சமிக்ஞை" என்று பதிவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில், பெயர் மாற்றம் அறிவிக்கப்பட்ட பின்னர் பல்வேறு விமர்சனங்களும் எழும் சூழலில் பிரதமர் மோடி மற்றுமொரு ட்வீட்டில், "மேஜர் த்யான் சந்த் இந்தியாவின் முன்னோடி விளையாட்டு வீரர்களில் ஒருவர். அவர் தேசத்துக்கு கவுரவமும் பெருமையையும் சேர்த்தவர். விளையாட்டுத் துறையில் நம் தேசத்தின் மிக உயரிய விருதை அவருடைய பெயரில் வழங்குவது பொருத்தமானதே" என்று கூறியுள்ளார்.

யார் இந்த த்யான் சந்த்?

1925ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை 1500 கோல்கள் அடித்து மாபெரும் சாதனையைப் புரிந்தவர் இந்திய ஹாக்கி வீரர் த்யான் சந்த். மேலும் 1928,1932,1936 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிக்கு தங்கப் பதக்கம் கிடைக்க முக்கியக் காரணமாகவும் இருந்தவர். இவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29, தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT