ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, அணியில் இடம் பெற்ற ஹரியாணா வீரர்களுக்கு தலா ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியின் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4-5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்நிலையில், பல்வேறு மாநிலங்களும் தங்கள் அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை சலுகைகளை அறிவித்துள்ளது. அந்தவகையில், ஹரியாணா மாநில வீரர்களுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஹரியாணா அரசின் சார்பில் இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற இரண்டு வீரர்களுக்கும் தலா ரூ.2.5 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
அவர்களுக்கு சலுகை விலையில் அரசு குடியிருப்பும், விளையாட்டுத் துறையில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார். கூடவே இந்திய ஹாக்கி அணியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அதேபோல், இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வீரர்கள் விவேக் சாகர், நீலகந்தா ஆகியோருக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சவுகான் அறிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அணியில் இடம் பெற்ற பஞ்சாப் வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பஞ்சாப் அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.