ஒலிம்பிக்ஸ் அரையிறுதிப் போட்டி வரை வந்துவிட்டு தோல்வியுற்றதை நினைத்து மகளிர் ஹாக்கி அணியினர் மனம் தளர்ந்துவிடக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி ஆறுதலும், ஊக்கமும் அளிக்கும் வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி, இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவி ராணி ராம்பால் மற்றும் பயிற்சியாளர் ஜோர்ட் மரிஜ்னேவிடம் பேசினார்.
அப்போது அவர் அரையிறுதிப் போட்டிவரை வந்து தோற்றுவிட்டோமே என்று மனம் தளரக் கூடாது. நீங்கள் (ராணி ராம்பால் மற்றும் ஜோர்ட் மரிஜ்னே) வழிநடத்திய அணியானது ஒரு திறன்வாய்ந்த அணி. அந்த அணி மிகவும் கடுமையாக உழைத்துள்ளது. ஆகையால் நீங்கள் அடுத்தக்கட்டத்தை எதிர்நோக்கி நகருங்கள் என்று கூறினார். மேலும், வெற்றி, தோல்வி என்பது நம் வாழ்க்கையின் ஓர் அங்கம் என்றும் அவர் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி, முதல் 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவினாலும் கூட அடுத்தடுத்து 2 வெற்றிகளைப் பதிவு செய்தது. இதனால், காலிறுதிக்கு முன்னேறியது.
காலிறுதியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதிக்கு நுழைந்து இந்திய மகளிர் ஹாக்கி அணி சாதனை படைத்தது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில், உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை இந்தியா எதிர்கொண்டது. ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின்மீது குவிந்தது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆனால், இந்த ஆட்டத்தில் இந்தியா 1-2 என தோல்வியடைந்தது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பிரிட்டன் அணியை நாளை மறுநாள் எதிர்கொள்கிறது.
ஏற்கெனவே, ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 2-5 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணியிடம் தோல்வி அடைந்தது என்பதும் நினைவுகூரத்தக்கது.