இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் | கோப்புப்படம் 
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை; இந்திய வீராங்கனை லவ்லினாவுக்கு வெண்கலம்: 9 ஆண்டுகளுக்குப் பின் பதக்கம்

பிடிஐ

டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் வெண்கலப் பதக்கம் வென்றார்.

69 கிலோ எடைப் பிரிவுக்கான அரையிறுதி ஆட்டத்தில் துருக்கி வீராங்கனை புசநாஸ் சர்மேநெலியிடம் 5-0 என்ற கணக்கில் லவ்லினா தோல்வி அடைந்தார்.

குத்துச்சண்டைப் பிரிவில் கடைசியாக 2012-ம் ஆண்டு மேரி கோம் பதக்கம் வென்றார். அதன்பின் 9 ஆண்டுகளுக்குப் பின் தற்போது லவ்லினா பதக்கம் வென்றுள்ளார். அதற்கு முன் 2008-ம் ஆண்டு விஜயேந்தர் சிங் பதக்கம் வென்றிருந்தார்.

23 வயதான லவ்லினா போர்கோஹெயின் இயல்பில் குத்துச்சண்டை வீராங்கனை அல்ல. தாய்லாந்தில் விளையாடப்படும் முபாய் தாய் எனும் குத்துச்சண்டை மற்றும் உதைத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய விளையாட்டில் தேர்ந்து அதன்பின் குத்துச்சண்டைக்கு மாறியவர்.

ஆட்டத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை துருக்கி வீராங்கனை புசனேஸ் சர்மேநேலியின் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. 2-வது சுற்றின்போது, நடுவர் இருமுறை எச்சரிக்கை விடுத்தும், அவர் கூறியதை சரிவரக் கேட்டுச் செயல்படாததால், இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயினுக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டது.

தொடக்கத்தில் துருக்கி வீராங்கனைக்குச் சவால் விடுக்கும் வகையில்தான் லவ்லினா செயல்பட்டார். ஆனால் சர்மேநேலியின் சில அதிரடியான பஞ்ச்கள் அவருக்குப் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தன.

இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெயின் கடந்த 2018, 2019ஆம் ஆண்டு மகளிர் உலக குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2017, 2021ஆம் ஆண்டில் நடந்த ஆசிய குத்துச்சண்டைப் போட்டியிலும் லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

SCROLL FOR NEXT