குவாஹாட்டியில் நடைபெற்று வரும் 12-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 40 கி.மீ. ‘டீம் டிரையல் சைக்கிளிங்’ பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்திய கோவையைச் சேர்ந்த மாணவி ஜி.மணிஷா (21) நேற்று சொந்த ஊர் திரும்பினார்.
கோவை மாவட்டம் அன்னூர் குமரன் நகரைச் சேர்ந்த மணிஷா, பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.காம். இறுதியாண்டு படித்து வருகிறார். இவரது தந்தை என்.குணசேகரன், மின்வாரியத்தில் சிறப்பு நிலை போர்மேனாக பணிபுரிகிறார். இவரது தாயார் இந்திராணி. சகோதரர் மோனீஷ் பொறியாளராக உள்ளார்.
மணிஷா கூறும்போது, "சைக்கிள் போட்டிகள் இந்தியாவில் அதிகம் பிரபலம் அடையவில்லை. அதேநேரம் அதிக செலவு கொண்டது. இந்த இரண்டு சவால்களையும் மீறி என்னை வீராங்கனையாக உருவாக்கியது எனது பெற்றோர்களே. தமிழகத்தில் இந்த விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியம். மற்ற விளையாட்டுச் சங்கங் களை ஒப்பிடும்போது சைக்கிள் வீரர், வீராங்கனை களுக்கு விளையாட்டு சங்கங்களிடமிருந்து கிடைக்கும் உதவிகள் சற்று குறைவாகவே இருக்கிறது என்றார்.