விளையாட்டு

சிந்து ஆறுதல் கூறியது கண்ணீரை வரவழைத்துவிட்டது: வெள்ளி வென்ற வீராங்கனை உருக்கம்

செய்திப்பிரிவு

ஒலிம்பிக் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நான் தோல்வியுற்றபோது சிந்து என்னை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியது எனக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது என்று சீன தைபே வீராங்கனை தாய் சூ யிங் தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை சென் யூஃபேவிடம் 18-21, 21-19, 18-21 என்ற செட் கணக்கில் போராடித் தோல்வியுற்றார் சீன தைபே வீராங்கனை தாய் ஜு யிங். இதன் மூலம் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் தாய் ஜு யிங்.

இந்த நிலையில் தனது போட்டி அனுபவம் குறித்து தாய் ஜு யிங் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தாய் ஜு யிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இறுதிப் போட்டி முடிந்த பிறகு, நான் என்னளவில் என் ஆட்டம் குறித்த திருப்தியுடனே இருந்தேன். அப்போது சிந்து என்னை நோக்கி ஓடிவந்து என்னைக் கட்டியணைத்துக் கொண்டார். என் முகத்தைப் பிடித்துக் கொண்டு நீங்கள் நன்றாக விளையாடினீர்கள். ஆனால், இன்றைய நாள் உங்களுடையது அல்ல என்று கூறினார். அவர் என்னை உற்சாகப்படுத்திய விதம் எனக்குக் கண்ணீரை வரவழைத்துவிட்டது” என்றார்.

அரையிறுதிப் போட்டியில் சீன தைபே வீராங்கனையிடம்தான் சிந்து தோல்வி அடைந்தார். முன்னதாக, சீன வீராங்கனை ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட்களில் தோற்கடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் சிந்து.

SCROLL FOR NEXT