விளையாட்டு

என்னால் 40 வயதுவரை விளையாட முடியும்: மேரி கோம் பதில்

செய்திப்பிரிவு

என்னால் 40 வயதுவரை விளையாட முடியும் என்று இந்திய குத்துச்சண்டை நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் போராடித் தோற்றார். இந்தத் தோல்வியின் மூலம் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது. இந்த நிலையில் தான் தோல்வி அடைந்ததை நம்ப முடியவில்லை என்று மேரி கோம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நாடு திரும்பிய மேரி கோமிடம் செய்தியாளர்கள், ஓய்வு பெறுவீர்களா அல்லது தொடர்ந்து விளையாடுவீர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மேரி கோம் பதிலளிக்கும்போது, “ஏன் என்னால் விளையாட முடியாது. எனக்கு இன்னமும் வயது இருக்கிறது. நான் 40 வயதுவரை விளையாடுவேன்” என்று தெரிவித்தார்.

இந்த பதிலின் மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மேரி கோம் ஓய்வு பெறுவார் என்று எழுந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தோல்வி அடைந்தது குறித்து மேரி கோம் கூறும்போது, “நான் போட்டியில் இறங்குவதற்கு முன்னர் நடுவர் என் ஜெர்சியை மாற்றக் கூறினார். இதற்கு முன்னர் எவரும் ஜெர்சி குறித்து எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக நான் மனரீதியாகச் சற்று புண்படுத்தப்பட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஏமாற்றிவிட்டனர். இதுகுறித்து நான் புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.

SCROLL FOR NEXT