டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் பிரிவின் மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்ற பி.வி.சிந்து இனிமேல், வெண்கலத்துக்கான போட்டியில் பங்கேற்க வேண்டும். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சிந்துவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீன வீராங்கனை பிங் ஜியாவோவுடன் மோதுகிறார் வி.சிந்து. தங்கப் பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை தாய் ஜு யிங்கை எதிர்த்து மோதுகிறார் மற்றொரு சீன வீராங்கனை சென் யூபி.
மகளி்ர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள்இன்று நடந்தன. இதில் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவை எதிர்த்து களமிறங்கினார் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீன வீராங்கனை தாய் ஜு யிங்.
40 நிமிடங்கள் நடந்த இந்த அரையிறுதி ஆட்டத்தில் சிந்துவை 21-18, 21-12 என்ற கேம் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்று வாய்ப்பை சீன வீராங்கனை தாய் ஜு யிங் உறுதி செய்தார்.
தனது 2-வது பதக்கத்தை கைப்பற்றும் முயற்சியில் சிந்து தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடினார். ஒரு கட்டத்தில் தாய் ஜு யிங்கைவிட 3 புள்ளிகள் முன்னிலை பெற்று 11-8 என்ற கணக்கில் சிந்து முன்னேறினார்.
ஆனால், அதன்பின் தாய் ஜு யிங் தனது ஆட்டத்தால் தொடர்ந்து 3 புள்ளிகள் எடுத்து 11-11 என்று சமன் செய்தார். சிந்துவும் தாய் ஜு யிங்கிற்கு நெருக்கடி அளித்து 14-15 என்று முன்னிலை பெற்றார்.
ஆனால், கடைசியில் தாய் ஜு யிங்வின் அபாரமான ஆட்டத்தால் முதல் கேமை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி சிந்துவுக்கு பின்னடைவு கொடுத்தார். முதல் கேம் 21நிமிடங்கள் நடந்தது.
2-வது கேமில் தொடக்கத்திலிருந்தே சிந்து 4-5 என்ற கணக்கில் தாய் ஜு யிங்கிடம் பின்தங்கினார். ஒரு கட்டத்தில் தாய் ஜு யிங் 11-7 என்ற கணக்கில் சிந்துவைக் கடந்து முன்னேறத் தொடங்கினார். சிந்து தனது முழுசக்தியையும் வெளிப்படுத்தி விளையாடி முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், தாய் ஜு யிங்கின் ஆதிக்கமே 2-வது கேம் முழுவதும் இருந்தது. இறுதியில் சிந்துவை 12-21 என்ற கேம் கணக்கில் தாய் ஜு யிங் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
தங்கப்பதக்கத்துக்கான இறுதி ஆட்டத்தில் சகநாட்டு வீராங்கனை சென் யூபியை எதிர்கொள்கிறார் தாய் ஜு யிங்.