இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹஸரங்காவின் சுழலில் 4 விக்கெட்டுகளை இந்தியா பறிகொடுக்க மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் வெற்றி இலக்கை இலங்கை வீரர்கள் எளிதாக எட்டினர். 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது இலங்கை அணி.
முக்கிய வீரர்கள் கரோனா அச்சம் காரணமாக கட்டாயத் தனிமையில் இருப்பதால், அனுபவமற்ற இளம் வீரர்களுடன் டாஸ் வென்று பேட்டிங் செய்யக் களமிறங்கினார் இந்திய அணி கேப்டன் ஷிகர் தவண். வெறும் 82 ரன்கள் வெற்றி இலக்கை 15 ஓவர்கள் முடிவதற்கு முன் இலங்கை அணி எட்டியது.
இலக்கை விரட்ட ஆரம்பித்த இலங்கை அணி நிதானமாக ரன் சேர்த்து வந்தது. ஆறாவது ஓவரில் ராகுல் சாஹர், அவிஷ்கா ஃபெர்னாண்டோ விக்கெட்டை வீழ்த்தினார். தேவைப்படும் ரன்கள் மிகக் குறைவாகவே இருந்ததால் இலங்கை அணியின் நிதானம் அவர்களை பாதிக்கவில்லை.
தொடர்ந்து ராகுல் சாஹர் இரண்டு விக்கெட்டுகள எடுத்தாலும் அதனால் இலங்கையின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.
முன்னதாக, இந்திய அணியின் பேட்டிங் ஹஸரங்காவின் சுழலில் சிக்கியது. நேற்று தனது 24-வது பிறந்த நாளைக் கொண்டாடிய அவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை மொத்தமாக முடக்கினார். இந்திய பேட்டிங்கின் முதல் ஓவரிலேயே ஷிகர் தவண் ஆட்டமிழந்தார். ஐந்தாவது ஓவரில் படிக்கல் ரன் அவுட் ஆனார். இதே ஓவரில் சஞ்சு சாம்சனும், தொடர்ந்து கெய்க்வாட்டும் ஆட்டமிழக்க, இந்திய அணி மிகக்குறைந்த ரன்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்துவிடுமோ என்கிற சூழல் உருவானது.
9-வது ஓவர் முடிவில் வெறும் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் இணை சில ஓவர்கள் களத்தில் நின்று கூடுதலாக 19 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தது. புவனேஷ்வர் குமார் 15-வது ஓவரில் ஹஸரங்காவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 63 ரன்களுக்கு 8 விக்கெட் என்கிற நிலையில் இருந்தபோது குல்தீப் - சக்காரியா இணை சற்று பொறுப்பாக ஆடி 18 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் என்கிற கட்டத்தை இந்தியா எட்டியது.
ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் ஹஸரங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார்.