டோக்கியோவில் இன்று நடந்த ஒலிம்பிக் ஹாக்கி லீக் ஆட்டத்தில் பிரிட்டன் வீராங்கனையிடமிருந்தை பந்தைக் கடத்த முயற்சிக்கும் இந்திய வீராங்கனை: படம் உதவி ட்விட்டர் 
விளையாட்டு

ஒலிம்பிக் ஹாக்கி: தோல்வி தொடர்கிறது: பிரிட்டனிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி: காலிறுதிக்கு தகுதிபெறுவது சந்தேகம்

பிடிஐ


டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஹாக்கிப் பிரிவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 1-4 என்ற கோல் கணக்கில் பிரிட்டன் அணி வீழ்த்தியது.

இந்திய அணி சந்திக்கும் 3-வது தோல்வி என்பதால் ஒலி்ம்பிக் காலிறுதிக்கு தகுதி பெறுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

பிரிட்டன் அணியில் ஹன்னா மார்டின் 2-வது மற்றும் 19-வது நிமிடத்தில் கோல் அடித்தார். லில்லி ஒஸ்லி 41-வது நிமிடத்திலும், கிரேஸ் பால்ஸ்டன் 57-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். குரூப் ஏ பிரிவில் இடம் பெற்ற பிரிட்டன் அணி பெறும் 2-வது வெற்றியாகும்.

இந்தியத்தரப்பில் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது, ஷர்மிலா தேவி 23-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இந்திய மகளிர் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன, அந்த இரு ஆட்டத்திலும் வென்றபின் மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைப் பொறுத்துதான், நாக்அவுட் சுற்றுக்குச் செல்வது உறுதியாகும்.

வெள்ளிக்கிழமை நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் மோதுகிறது இந்திய அணி.
இதற்கு முன் நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியுடன் 0-2 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பிரிட்டன் அணிக்கும்,11-வது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கும் நடந்த இந்த ஆட்டம் பரபரப்பாகத்தான் இருந்தது. ஆனால், இதில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சரியாக தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு பிரிட்டன் வீராங்கனைகள் கோலாக மாற்றினர். ஆனால், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் இந்திய வீராங்கனைகள் கோட்டைவிட்டனர்.

இந்திய வீராங்கனைகள் 8 பெனால்டி கார்னர் ஷாட்களை தடுத்து சிறப்பாக ஆடினாலும், ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆனால், பிரிட்டன் அணிக்கு 6 பெனால்டி கார்னர் கிடைத்தபோதிலும் அதில் ஒன்றை மட்டுமே கோலாக்கினர்.

SCROLL FOR NEXT