கோப்புப்படம் 
விளையாட்டு

டி20 தொடரிலிருந்து குர்னல் பாண்டியா நீக்கம்: 8 வீரர்களும் இன்று போட்டியில் இல்லை? புதிய அணி களமிறங்கும்; தொற்று ஏற்பட்டது எப்படி?

பிடிஐ


இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் ஆல்ரவுண்டர் குர்னல் பாண்டியா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த 8 வீரர்களும் கொழும்பு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த 8 வீரர்களுக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் எந்த வீரருக்கும் கரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடக்கும் 2-வது டி20 போட்டியில் இந்த 8 வீரர்களும் களமிறங்க முடியாது எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று நடக்கும் 2-வது டி20 போட்டியில் குர்னல் பாண்டியா உள்ளிட்ட 9 வீரர்கள் தவிர மற்ற வீரர்கள்தான் களமிறங்குவார்கள் எனத் தெரிகிறது. இலங்கை பயணத்துக்கு 20 வீரர்கள் கொண்ட அணியும், வலைப்பயிற்சிக்காக 4 பந்துவீச்சாளர்களுடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 3-வது டி20 ஆட்டம் வழக்கம் போல் நாளை(வியாழக்கிழமை) திட்டமிட்டபடி நடக்கும்

இலங்கை நாட்டின் கரோனா தடுப்பு விதிகளின்படி, குர்னல் பாண்டியா வரும் 30-ம் தேதி இந்திய அணியுடன் தாயகம் திரும்ப முடியாது. குர்னல் பாண்டியா தனக்குரிய தனமைப்படுத்தும் காலத்தை முடித்து, அதன்பின் ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தபின்புதான் தாயகம் வர முடியும்.

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில் “ குர்னல்பாண்டியாவு அறிகுறியில்லாத கரோனா தொற்று ஏற்பட்டு வறட்டு இருமலும், தொண்டை வலியும் இருந்தது. இதையடுத்து, உடனடியாக ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டி20 தொடரில் அடுத்த இரு போட்டிகளிலும் குர்னல் பாண்டியா விளையாடமாாட்டார்.

பிசிசிஐ மருத்துவ அதிகாரி அபிஜித் சால்வே நடத்திய பரிசோதனையில் குர்னல் பாண்டியாவுடன் நெருக்கமாக இருந்த மற்ற 8 வீரர்களுக்கும் கரோனா இல்லை எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும் 8 வீரர்களும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 8 வீரர்களும் இன்றைய ஆட்டத்தில் விளையாடமுடியாது. ” எனத் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில் “ இந்திய, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி 27-ம் தேதி நடக்க இருந்து. குர்னல் பாண்டியாவுக்கு கரோனா தொற்று இருப்பதையடுத்து, வீரர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது இதில் யாருக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதனால் 2-வது டி20 போட்டி புதன்கிழமையும்(இன்று) 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 29ம்தேதி(நாளை) நடக்கும்” எனத் தெரிவித்தார்.

ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டுள்ள 8 வீரர்களுக்கும் நடத்தப்பட்ட ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் வரும்வரை தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள்.

தொற்று எப்படி ஏற்பட்டது?

இந்தியா இலங்கை இடையிலான டி20 போட்டிகள் அனைத்தும் பார்வையாளர்கள் இல்லாத மைதானத்தில்தான் நடத்தப்படுகிறது. ஆதலால், பார்வையாளர்கள் வருவதற்கும் வாய்ப்பில்லை.

ஹோட்டலில் தங்கிய இடத்தில்தான் பயோ-பபுள் விதிமுறை மீறல் நடந்திருக்கும். அதாவது பேருந்து ஓட்டுநர், மைதானப் பராமரிப்பாளர்கள், ஹோட்டல் ஊழியர்கள் மூலம் வீரர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT