விளையாட்டு

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெறுகிறது: லோதா கமிட்டி பரிந்துரைகள் ஏற்கப்படுமா?

பிடிஐ

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயற்குழு கூட்டம் மும்பையில் இன்று காலை 11 மணி அளவில் கூடுகிறது. இதைத்தொடர்ந்து பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

பிசிசிஐ அமைப்பை சீரமைக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி சில பரிந்துரைகளை அளித்தது. ஒருவர் 3 முறைக்கு மேல் பிசிசிஐ நிர்வாகியாக இருக்கக்கூடாது. 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது உள்ளிட்டவை அதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

அந்த பரிந்துரைகளை பிசிசிஐ உடனடியாக அமல்படுத்த வில்லை. இதையடுத்து இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாக வரும் மார்ச் 3ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என பிசிசிஐக்கு கெடு விதித்தது.

சிறப்புக் கூட்டம்

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பதிலளிப்பதற்கு முன்னதாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களின் கருத்துகளை கேட்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை இன்று மும்பையில் கூட்டியுள்ளது.

காலை 11 மணி அளவில் நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தை தொடர்ந்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் கூடுகிறது. இதில் லோதா கமிட்டி பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

லோதா கமிட்டி பரிந்துரைகள் தொடர்பாக ஏற்கெனவே பிசிசிஐ தலைவர் ஷசாங் மனோகர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் லோதா குழுவின் பரிந்துரைகளால் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் கேட்டறியப்பட்டுள்ளன. இதுதொடர்பாக இன்றைய கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட உள்ளது.

நிதி ஆதாயம்

மேலும் சமீபத்தில் ஐசிசி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் ஒரு சில திருத்தங்கள் மேற்கொண்டது. இதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பெறும் அதிக நிதி ஆதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதுதொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

SCROLL FOR NEXT