இந்திய வீராங்கனை மீராபாய் சானு | கோப்புப்படம் 
விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு ரூ.ஒரு கோடி: மணிப்பூர் அரசு அறிவிப்பு

ஏஎன்ஐ


டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்த மீராபாய் சானுவுக்கு ரூ.ஒரு கோடி ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டில் கர்னம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் வெண்கலப்பதக்கம் வென்றபின் தற்போது பளுதூக்குதலில் 2-வது வீராங்கனையாக சானு பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமல்லமல் ஒலிம்பிக்கில் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளி வென்ற முதல் வீராங்கனையும் சானு என்பது குறிப்பிடத்தக்கது.

49 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் பங்கேற்ற மீராபாய் சானு மொத்தம் 202 கிலோ(87கிலோ ஸ்நாட்ச், 115கிலோ க்ளீன் ஜெர்க்) தூக்கி 4 விதமான முயற்சிகளிலும் அசத்தி வெள்ளியை உறுதி செய்துள்ளார்.

மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு புதிய வரலாறு படைத்துள்ளதையடுத்து, அவருக்கு ரூ.ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் அறிவித்துள்ளார்.

முதல்வர் என்.பிரேன் சிங் நேற்று வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் “ வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் இன்று கூட்டம் நடத்தினோம். அப்போது மீராபாய் வெற்றி குறித்து அறிவித்தேன். இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கத்தை வென்று பட்டியல் கணக்கை தொடங்கியுள்ளார். மீராபாய்க்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

இந்த செய்தியைக் கேட்டபின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்னை அழைத்துப் பேசி மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மீராபாய் சானுவை ஊக்கப்படுத்தும் விதமாக மணிப்பூர் அரசு ரூ.ஒரு கோடி ரொக்கப்பரிசு வழங்கும்.

இனிமேல், மீராபாய் சானு ரயில்நிலையங்களில் டிக்கெட் வசூலிக்கும் பணியைச் செய்ய வேண்டாம். உங்களுக்காக சிறந்த பணியிடத்தை வழங்க இருக்கிறோம். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரிடம் பேசுவேன். உங்களுக்காக இன்பஅதிர்ச்சி காத்திருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT