நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசிய ஆஸி. வீரர் ஆடம் வோஜஸ் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் விளையாடி அவுட்டாகிய இன்னிங்ஸ் வரை அதிக ரன்கள் சேர்த்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 48 ஓவரில் 183 ரன்களுக்கு சுருண்டது. கிரெய்க் 41 ரன் எடுத்தார். ஆஸி. தரப்பில் ஹஸல்வுட் 4 விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. உஸ்மான் ஹவாஜா 57, ஆடம் வோஜஸ் 7 ரன்னுடன் நேற்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
சர்வதேச போட்டிகளில் 4வது சதம் அடித்த ஹவாஜா 216 பந்தில், 25 பவுண்டரிகளுடன் 140 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தது. 7 ரன்னில் நடுவர் ரிச்சர்டு இல்லிங்வொர்த்தின் தவறான தீர்ப்பால் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய வோஜஸ் தனது 5வது சதத்தை 203 பந்துகளில் பூர்த்தி செய்தார். மார்ஷ் 0, நேவில் 32 ரன்களில் ஆட்டமிழந்தனர். நேற்றைய 2வது நாள் ஆட்டம் முடிவில் ஆஸி. அணி 6 விக்கெட் இழப்புக்கு 463 ரன்கள் குவித்தது.
வோஜஸ் 176, பீட்டர் சிடில் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸி. தரப்பில் டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஆஸி. அணி 280 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில் கைசவம் 4 விக்கெட்டுகளுடன் இன்று 3வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் 176 ரன்கள் குவித்த 36 வயதான வோஜஸ் தொடர்ச்சியாக ஆட்டமிழக்காமல் விளையாடி அவுட்டாகிய இன்னிங்ஸ் வரை அதிக ரன்கள் சேர்த்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். கடந்த 2004ல் சச்சின் 4 இன்னிங்ஸில் (241*, 60*, 194*, 2 ) 497 ரன்கள் குவித்திருந்தார். தற்போது வோஜஸ் மூன்று இன்னிங்ஸில் 269*, 106*, 176* என மொத்தம் 551 ரன்கள் குவித்துள்ளார். மேலும் அவரது சராசரியும் 100.33 ஆக உயர்ந்துள்ளது.