விளையாட்டு

செய்திகள்: வெலிங்டனில் இன்று 2வது ஒருநாள் போட்டி

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டம் வெலிங்டனில் இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு போட்டி நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் 24.2 ஓவர்களில் சுருண்டதுடன் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸி. அணி இன்றைய ஆட்டத்தில் மீண்டும் தோல்வியை சந்தித்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி கூடுதல் கவனத்துடன் விளையாடக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் ஷான் மார்ஷ்க்கு பதிலாக ஹவாஜா களமிறங்குகிறார்.

---------------------------------------------

தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி

ஆஸ்திரேலியா-இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிகள் நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹோபர்ட்டில் மோதின. முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. மன்தனா 109 பந்தில், 11 பவுண்டரிகளுடன் 102 ரன் விளாசினார்.

253 ரன்கள் இலக்குடன் ஆஸி. மகளிர் அணி விளையாடியது. அந்த அணி 46.4 ஓவரில் 4 விக்கெட்இழப்புக்கு 253 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. போல்டன் 77, லேன்னிங் 61 ரன் எடுத்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸி. அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என தனதாக்கியது. கான்பராவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அந்த 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. கடைசி ஆட்டம் நாளை இதே மைதானத்தில் நடைபெறுகிறது.

---------------------------------------------

அரையிறுதியில் சவுராஷ்டிரா

ரஞ்சி கோப்பை காலிறுதியில் விதர்பா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

விஜயநகரத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் விதர்பா 50.4 ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது. சவுராஸ்டிரா அணி முதல் இன்னிங்ஸில் 112.4 ஓவரில் 375 ரன்கள் சேர்த்தது. 224 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 68.1 ஓவரில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஜாபர் 48 ரன் எடுத்தார். சவுராஷ்டிரா தரப்பில் உனத்கட் 4, புனியா 3 விக்கெட் கைப்பற்றினர். இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

---------------------------------------------

இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி

பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசியா-ஓசியான மண்டல பிரிவில் இந்திய அணி தாய்லாந்து, ஜப்பான் அணிகளிடம் தோல்வியடைந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த நிலையில் நேற்று தனது கடைசி ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை எதிர் கொண்டது. இதில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரேர்ணா பாம்ப்ரி, அங்கிதா வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அங்கிதா ஜோடி 6-2, 6-0 என்ற நேர்செட்டில் எளிதாக அமன்முரடோவா, அரினா போல்ட்ஸ் ஜோடியை வெறும் 48 நிமிடங்களில் தோற்கடித்தது.

ஆறுதல் வெற்றி மட்டும் பெற்ற இந்திய அணி 5து இடத்துக்கான ஆட்டத்தில் கஜகஸ்தானுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT