புதுச்சேரியில் நேற்று தொடங்கிய தேசிய சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் தமிழக அணி இரு பிரிவுகளிலும் வென்றது. பிரியங்கா மகள் மிரயா வதேரா பங்கேற்ற அரியானா அணி தோல்வியடைந்தது.
புதுச்சேரியில் தேசிய அளவிலான சப் ஜூனியர் கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. போட்டிகள் வரும் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் 25 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். சிறுவர் பிரிவில் 23 அணிகளும், சிறுமியர் பிரிவில் 22 அணிகளும் கலந்துகொண்டுள்ளன.
அரியானா மாநில அணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா பேத்தியும், பிரியங்கா மகளுமான மிரயா வதேரா இடம்பெற்றுள்ளார். இதற்காக தனது குழந்தைகளுடன் புதுச்சேரிக்கு நேற்று முன்தினம் பிரியங்கா வந்தார்.
நேற்று காலை நடைபெற்ற போட்டியில் மிரயா இடம்பெற்றுள்ள அரியானா அணி, தமிழக அணியை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 80-58 என்ற புள்ளி கள் கணக்கில் வெற்றி பெற்றது. அரியானா அணியில் தடுப்பாட்டக் காரராக மிரயா விளையாடினார். 3 நாட்கள் ரயிலில் பயணம் செய்து வந்ததால் சிறுமிகள் களைப்புடன் விளையாடியதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் சட்டீஸ்கர் அணி டெல்லி அணியை 89-76 என்ற கணக்கில் வென்றது. சிறுவர்களுக்கான பிரிவில் தமிழக அணி, மேற்கு வங்க அணியை 84-79 என்ற கணக்கில் தோற்கடித்தது.