விளையாட்டு

ஒலிம்பிக் நினைவலைகள் - 1: ஏட்டிக்குப் போட்டியாக நடந்த போட்டி!

மிது கார்த்தி

1896ஆம் ஆண்டில் தொடங்கிய நவீன ஒலிம்பிக் போட்டிகள் தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர்த்து எல்லாக் காலங்களிலும் நடைபெற்றுள்ளன. 1916 (முதல் உலகப் போர்), 1940, 1944 (இரண்டாம் உலகப் போர்) ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை. இதேபோல 1984ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றபோது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு அரங்கேறியது.

1970, 80களில் சோவியத் யூனியன் - அமெரிக்கா இடையே பனிப்போர் நிலவிய காலம். அந்தச் சூழலில் 1980ஆம் ஆண்டில் மாஸ்கோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. ஆனால், இந்தப் போட்டியை அமெரிக்கா புறக்கணித்தது. அதற்கு பதிலடி தர சோவியத் யூனியன் காத்திருந்தது. 1984ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியைப் புறக்கணிப்பதாக சோவியத் யூனியன் அறிவித்து பழிதீர்த்துக் கொண்டது. சோவியத் யூனியன் தலைமையிலான சில நாடுகளும், அதன் நட்பு நாடுகளும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன.

ஒலிம்பிக்கிற்குப் போட்டியாக ‘பிரெண்ட்ஷிப் கேம்ஸ்' (நல்லுறவு விளையாட்டு) என்ற பெயரில் சோவியத் யூனியனில் நடத்தப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்த அதே காலகட்டத்தில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன. சோவியத் யூனியன் மட்டுமல்லாமல், அதன் ஆதரவு மற்றும் நட்பு நாடுகளும் பங்கேற்றன. லாஞ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற சில நாடுகளும் நல்லுறவு விளையாட்டிலும் பங்கேற்றன. அதன்படி இந்தியா உள்ளிட்ட நாடுகளும் நல்லுறவு விளையாட்டில் பங்கேற்றன. மொத்தமாக 50 நாடுகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியில் சோவியத் யூனியன் 126 தங்கம், 87 வெள்ளி, 69 வெண்கலம் என 282 பதக்கங்களைப் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்தது. வல்லரசு நாடுகளுக்கு இடையே நிலவிய இந்தப் போட்டா போட்டி குறிப்பிடத்தக்க நிகழ்வாக ஒலிம்பிக் வரலாற்றின் பக்கங்களில் இன்றும் பேசப்படுகிறது.

SCROLL FOR NEXT