விளையாட்டு

பதிலடி கொடுத்த அஷ்வின்: 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்

செய்திப்பிரிவு

சோமர்செட் அணிக்கு எதிரான கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்தின் உள்ளூர் அணிகள் ஆடும் கவுன்டி சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் சர்ரே அணியில் ஆட இந்திய அணியின நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சோமர்செட் அணிக்கு எதிரான டெஸ்டில் சர்ரே அணிக்காக களமிறங்கிய அஷ்வினுக்கு முதல் இன்னிங்ஸில் ஏமாற்றமே மிஞ்சியது. 42 ஓவர்கள் வீசி 96 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அஷ்வின் விக்கெட் எடுக்க தத்தளித்ததை, அவர் ஆடிவரும் சர்ரே அணியின் ட்விட்டர் பக்கமே கிண்டல் செய்யும் விதமாகப் பதிவிட்டிருந்தது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் இது நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் அஷ்வின் விக்கெட் எடுக்காதது ஏமாற்றமளித்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசிய அஷ்வின் வெறும் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சோமர்செட் அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 69 ரன்களுக்கு அத்தனை விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அஷ்வினின் பங்கே பிரதானமாக இருந்தது.

அஷ்வினின் சிறப்பான பந்துவீச்சு, ட்விட்டரில் அவரது பெயர் ட்ரெண்ட் ஆகும் அளவுக்குப் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. கடைசி நாள் ஆட்டமான இன்று 259 ரன்கள் வெற்றி இலக்கை சர்ரே அணி விரட்டி வருகிறது.

SCROLL FOR NEXT