டோக்கியோவில் விரைவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரிலிருந்து விலகுவதாக ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் திடீரென அறிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் டென்னிஸ் போட்டிகளில் உலக அளவில் பல்வேறு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் நாட்டு அணிக்காகப் பங்கேற்பார்கள்.
இந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் காயம் காரணமாகப் பங்கேற்க முடியாத சூழலில் இருப்பதாகக் கூறி ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் திடீரென விலகியுள்ளார். 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் தங்கத்தையும், 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் ஃபெடரர் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் நடந்து முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காஸிடம் 6-3, 7-6, 6-0 என்ற நேர் செட்களில் ஃபெடரர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
அப்போது அவர் அளித்தபேட்டியில், “இதுதான் நான் கடைசியாக விளையாடும் கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடராக இருக்குமா எனத் தெரியாது” என உணர்ச்சிகரமாகத் தெரிவித்தார். இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்தும் விலகியுள்ளார்.
ரோஜர் ஃபெடரர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நான் விளையாடியபோது துரதிர்ஷ்டமாக என் முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயம் காரணமாக, நான் கண்டிப்பாக டோக்கியோ ஒலிம்பிக் தொடரிலிருந்து விலக வேண்டியுள்ளது.
ஸ்விட்சர்லாந்து நாட்டுக்காக ஒவ்வொரு முறையும் நான் ஒலிம்பிக்கில் விளையாடுவது எனக்கு கவுரவமாக இருந்தது. இந்த முறை விளையாடமல் இருப்பது வேதனையளிக்கிறது. இந்தக் கோடைக் காலத்தில் நடக்கும் போட்டித் தொடரில் விளையாடுவதற்காக எனது சிகிச்சை முறையைத் தொடங்கிவிட்டேன். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஸ்விட்சர்லாந்து அணிக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.