ஜேம்ஸ் வின்ஸின் சதம், கிரிகோரியின் பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால், பிர்மிங்ஹாமில் நேற்று நடந்த கடைசி மற்றும் 3-வது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் சேர்த்தது. 332 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 332 ரன்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஆட்டநாயகன் விருது இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் வின்ஸுக்கும், தொடர் நாயகன் விருது இங்கிலாந்து வீரர் சகியூப் மகமூதுவுக்கும் வழங்கப்பட்டது.
எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்து அணி சேஸிங் செய்த முதல் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சி டீம் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இங்கிலாந்தின் பிரதான அணி கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்தின் “சி டீம்”தான் களமிறங்கியது (பெரும்பாலும் கவுண்ட்டி வீரர்கள்). ஆனால், சி டீம் என்று நினைக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு போட்டியிலும் பாகிஸ்தானைத் துவைத்துத் தொங்கவிட்டனர்.
இங்கிலாந்து அணி எதிர்கால வீரர்களைத் தேர்வு செய்ய இந்தத் தொடரை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. பிரதான வீரர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சூழல்தான், பல வீரர்களை அடையாளம் காண உதவியுள்ளது. குறிப்பாக வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் கிரிகோரி, வேகப்பந்துவீச்சாளர் கியுப் மகமது, தொடக்க வீரர் பில் சால்ட், ஓவர்டன் போன்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பாபர் ஆஸம் தலைமையிலான அணிக்கு இது பெரும் அடி. கேப்டன் பாபர் ஆஸம் நேற்றைய ஆட்டத்தில் 158 ரன்கள் சேர்த்தும் அவரின் ஆட்டம் வீணானது. 332 ரன்கள் என்பது வலுவான ஸ்கோராக இருந்தும், அந்த ரன்னுக்களுள் டிபெண்ட் செய்யத் தவறினர் என்றால், பாகிஸ்தானின் மோசமான பந்துவீச்சுதான் தோல்விக்குக் காரணமாக இருக்க முடியும்.
இங்கிலாந்து அணியின் சி டீம் வீரர்கள்தான் விளையாடிய போதிலும் அவர்களின் விக்கெட்டுகளைக் கழற்றமுடியாத அளவில் பல் இல்லாத பந்துவீச்சாகத்தான் பாகிஸ்தான் அணி இருந்துள்ளது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் ஜேம்ஸ் வின்ஸ் அடித்த சதமும், நடுவரிசையில் களமிறங்கி கலக்கிய கிரிகோரியின் (77 ரன்கள்) ஆட்டம்தான். கிரிகோரி தனது 3-வது போட்டியில்தான் களமிறங்கினாலும், இங்கிலாந்து அணிக்குள் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார்.
கடந்த போட்டியில் ஜொலிக்காத வின்ஸ் இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சை நொறுக்கிவிட்டார். 102 ரன்கள் சேர்த்து வின்ஸ் ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். வின்ஸ் ஒருநாள் போட்டியில் தனது முதலாவது சதத்தையும் இதில் பதிவு செய்தார். 6-வது விக்கெட்டுக்கு கிரிகோரி, வின்ஸ் இருவரும் சேர்ந்து 129 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 24 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்து இக்கட்டான நிலையில்தான் இருந்தது. ஆனால், கிரிகோரி, வின்ஸ் கூட்டணி அணியை கரையேற்றி விட்டனர். இருவரும் ஆட்டமிழந்த நிலையில், கிரேக் ஓவர்ன் 18 ரன்களிலும், கார்ஸ் 12 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பென் ஸ்டோக்ஸ் 32, கிராளி 39 ரன்கள் சேர்த்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஆறுதலான விஷயம் பாபர் ஆஸமின் சதம், பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதுதான். மற்ற வகையில் பாகிஸ்தான் பந்துவீச்சு இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எந்தவிதத்திலும் சிரமத்தைக் கொடுக்கவில்லை.
பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. பக்கர் ஜமான் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பாபர் ஆஸம், இமானுல் ஹக் ஜோடி 92 ரன்கள் சேர்த்துப் பிரிந்தது. இமானுல்ஹக் 56 ரன்களில் ஆட்டமிழந்தார்.
3-வது விக்கெட்டுக்கு ரிஸ்வான், பாபர் ஜோடி அணியின் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். இருவரும் சேர்ந்து 179 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். ரிஸ்வான் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் ஆஸம் 104 பந்துகளில் சதம் அடித்து 134 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 158 ரன்கள் சேர்த்த நிலையில் (4 சிக்ஸர்,14 பவுண்டரி) பாபர் ஆஸம், கார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் 74 ரன்கள் சேர்த்தநிலையில் கார்ஸிடம் விக்கெட்டை இழந்தார்.
மற்றவகையில் பாகிஸ்தான் அணியில் பெரிதாக எந்த வீரரும் ஸ்கோர் செய்யவில்லை. 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழந்தது. இங்கிலாந்து தரப்பில் கார்ஸ் 5 விக்கெட்டுகளையும், மகமூத் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.