விளையாட்டு

ரன்பீர் கபூர் நடிப்பில் கங்குலியின் பயோபிக்?

செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தற்போதையை பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணம் திரைப்படமாக உருவாகிறது. இதில் ரன்பீர் கபூர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் கேப்டன்கள் வரிசையில் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர் சவுரவ் கங்குலி. 1996ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி அடுத்தடுத்து இரு சதங்களை அடித்து கவனத்தை ஈர்த்தவர்.

2000ஆம் ஆண்டில் இந்திய அணிக்குள் மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரம் தலைதூக்கியபின் கேப்டனாக கங்குலி நியமிக்கப்பட்டார். தனது திறமையாலும், தலைமைப் பண்பாலும் அணிக்குச் சிறந்த கேட்பனாக கங்குலி வலம் வந்தார்.

பேட்டிங்கில் ஆவேசத்தையும், களத்தில் ஆக்ரோஷத்தையும் இணைத்துச் செயலாற்றுவதுதான் கங்குலியின் பழக்கமாகும். கங்குலி மட்டும் களத்தில் நிலைத்து நின்றுவிட்டால், நேரம் செல்லச் செல்ல பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறக்கும். கங்குலி தலைமையில் வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்திய அணி 11 வெற்றிகளைப் பெற்றது.

கங்குலி கேப்டனாக இந்திய அணிக்கு நியமிக்கப்பட்டதில் இருந்துதான் அணித் தேர்வில் புதிய முறைகள் பின்பற்றப்பட்டன. இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக அளிக்கப்பட்டன. கங்குலிக்கு அடுத்தபடியாக வெற்றி கேப்டனாக வலம் வந்த தோனியும் கங்குலியின் கண்டுபிடிப்புதான்.

தற்போது பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக உருவாகவுள்ளதாக கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை கங்குலி இவற்றை மறுத்து வந்திருந்தார்.

தற்போது, தனது பயோபிக் எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கங்குலி கூறியுள்ளார். "ஆம் எனது பயோபிக் எடுக்கப்பட சம்மதித்துள்ளேன். இந்தியில் உருவாகிறது. இப்போதைக்கு இயக்குநரின் பெயரைச் சொல்வது சாத்தியமற்றது. எல்லாம் ஏற்பாடு செய்ய இன்னும் சில தினங்கள் ஆகும்" என்று கங்குலி கூறியுள்ளார்.

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவிருப்பதாகக் கூறப்படும் இந்த பயோபிக்கில் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று கங்குலி விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. கங்குலியின் ஆரம்ப நாட்களிலிருந்து அவர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டது வரை நடந்த முக்கியச் சம்பவங்களை இந்தப் படம் கூறவிருக்கிறது.

ஏற்கெனவே எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதை திரைப்படமாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. சச்சினின் வாழ்க்கைப் பயணம் ஆவணப்படமாகச் சொல்லப்பட்டது. தற்போது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த் மிதாலி ராஜ், ஜுலம் கோஸ்வாமி ஆகியோரின் வாழ்க்கைக் கதைகள் திரைப்படமாக எடுக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT