இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், 1983-ல் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த யஷ்பால் சர்மா காலமானார். அவருக்கு வயது 66.
பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் 1954ஆம் ஆண்டு யஷ்பால் சர்மா பிறந்தார். 1978ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். 1979ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டரில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 37 டெஸ்ட் போட்டிகளில், 1,606 ரன்களை சர்மா சேர்த்துள்ளார். இதில் இரண்டு சதங்களும், 9 அரை சதங்களும் அடங்கும். 42 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 883 ரன்களைச் சேர்த்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும். 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் சர்மா இடம்பெற்றிருந்தார்.
இந்த உலகக் கோப்பையில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆடிய முதல் போட்டியில், இந்திய அணியில் அதிகபட்சமாக 89 ரன்களைச் சேர்த்தது யஷ்பால் சர்மாதான். அந்தப் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு இவரது ரன் சேர்ப்பு முக்கியக் காரணமாக இருந்தது. மேலும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் இவர் சேர்த்த 61 ரன்களே அதிகபட்சமாக இருந்தது. இறுதிப் போட்டியில் இவர் 11 ரன்களைச் சேர்த்திருந்தார்.
குறிப்பாக, 1982ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் குண்டப்பா விஸ்வநாத்துடன் இணைந்து யஷ்பால் சர்மா பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த 316 ரன்கள் இன்றளவும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த போட்டிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்த இன்னிங்ஸில் சர்மா 140 ரன்களைச் சேர்த்தார். இந்தியாவின் சிறந்த 3வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 22 ஆண்டுகள் இந்த சாதனை நிலைத்தது. 2004ஆம் ஆண்டு முல்தானில் சேவாக் - சச்சினின் 336 ரன்கள் பார்ட்னர்ஷிப்பே இதை முந்தியது.
ஓய்வுக்குப் பிறகு சில காலம் கள நடுவராகவும், அதன்பின் இந்திய கிரிக்கெட் அணியின் தேசியத் தேர்வாளராகவும் சர்மா இருந்தார்.
யஷ்பால் சர்மா, மனைவி ரேணு சர்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு பூஜா, ப்ரீத்தி என இரண்டு மகள்களும், சிராக் சர்மா என்கிற ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று தீவிரமான மாரடைப்பின் காரணமாக யஷ்பால் சர்மாவின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.