இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் வரும் 18-ம் தேதி தொடங்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் செய்த இலங்கை அணி அந்நாட்டுடன் ஒருநாள் தொடர், டி20 தொடரில் விளையாடி நாடு திரும்பியது. இலங்கை அணி தாயகம் திரும்பிய சில நாட்களில் இங்கிலாந்து அணியில் உள்ள 3 வீரர்களுக்குத் தொற்று இருப்பது உறுதியானது.
இதையடுத்து, இலங்கை வீரர்களுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், டேட்டா அனலிஸ்ட் டி.நிரோஷன் ஆகியோருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் வீரர்களுக்கான வழக்கமான தனிமைப்படுத்தும் காலத்தைக் கூடுதலாக 3 நாட்கள் நீடித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
இதன் காரணமாக வேறு வழியின்றி இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள், டி20 தொடர் தொடங்கும் தேதியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே திட்டமிட்டபடி ஜூலை 13ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி, 16, 18ஆம் தேதிகளில் அடுத்த இரு போட்டிகளும் நடத்தப்பட இருந்தன. டி20 போட்டிகள் ஜூலை 21, 23, 25ஆம் தேதிகளில் நடத்தப்பட இருந்தன.
இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேதி மாற்றம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், “இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் நாள் போட்டி வரும் 13ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், இலங்கை அணியில் வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, 5 நாட்கள் தாமதமாக 18ஆம் தேதி தொடங்கும். 2-வது போட்டி 20ம் தேதியும், 3-வது போட்டி 23ம் தேதியும் நடக்கும். அனைத்துப் போட்டிகளும் கொழும் பிரமதேசா அரங்கத்தில் நடக்கும். டி20 போட்டி 25-ம் தேதி தொடங்கும். 2-வது போட்டி 27-ம் தேதியும், 3-வது போட்டி 29-ம் தேதியும் நடக்கும். ” என ஜெய் ஷா தெரிவித்தார்.
இதற்கிடையே இலங்கை வீரர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒரு பிரிவை கொழும்புவிலும், மற்றொரு பிரிவினரை தம்புலாவிலும் இலங்கை வாரியம் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.