இலங்கை அணியில் 2-வது நபர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பாதிக்கப்பட்ட நிலையில், புள்ளிவிவர ஆய்வாளரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர் வரும் 13-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இலங்கை அணிக்குள் கரோனா புகுந்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அணி வெளியிட்ட அறிவிப்பில், ''இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அணியில் உள்ள டேட்டா அனலிஸ்ட் நிரோஷனும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் நிரோஷனுக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவருக்கு எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இருவருமே லேசான அறிகுறிகளுடனே சிகிச்சை எடுத்து இயல்பாக இருக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியில் 3 வீரர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு ஒட்டுமொத்த அணியுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பயணம் முடித்துவிட்டு வந்த இலங்கை அணிக்கு இந்தத் தகவல் அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து, இலங்கை வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், வீரர்களுக்கு பிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் கிராண்ட் ஃபிளவருக்குத் தொற்று இருப்பது உறுதியானது.