மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தைச் சேர்ந்த வீரமணி – ராணி ஆகியோரின் மகள் ரேவதி (23). தற்போது தடகள வீராங்கனையான இவர் ஜப்பான், டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் 4 X 400 மீ கலப்புத் தொடர் ஓட்டத்தில் பங்கேற்க இந்தியா சார்பில் தேர்வு பெற்றுள்ளார்.
இதுகுறித்து ரேவதி, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''என் சொந்த ஊர் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம். எனது பெற்றோர் வீரமணி – ராணி ஆகியோர் எனக்கு 3 வயதாக இருக்கும்போதும் அப்பாவும், 4 வயது இருக்கும்போது அம்மாவும் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டனர். எனது தாய் வழிப் பாட்டியான ஆரம்மாளின் அரவணைப்பில் நானும், எனது தங்கை ரேகாவும் வளர்ந்து வருகிறோம்.
ஆறாம் வகுப்பு வரை நத்தம் அருகே வேம்பரளி கிராமத்திலுள்ள பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தேன். பிறகு 6-ம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை மதுரை மூன்று மாவடியில் உள்ள எல்சிஎம் மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அப்போது எங்களுக்கு கிராமத்தில் வளர்ந்ததால் விளையாட்டுகள் பற்றித் தெரியாது.
ஆறாம் வகுப்பு படிக்கும்போது ஓட்டப் பந்தய விளையாட்டில் வெறும் காலில் ஓடி முதல் பரிசு பெற்றேன். அதனைப் பார்த்து வியந்த தடகளப் பயிற்சியாளர் கண்ணன், எனது திறமையைப் பார்த்து எனக்கு ஷூ வாங்கிக் கொடுத்தார். பின்னர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து உற்சாகப்படுத்தினர். பின்னர் மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கச் சேர்த்துவிட்டார். என்னைப் போன்றுள்ள மேலும் 3 விளையாட்டு வீராங்கனைகளுக்கு அவரது வீட்டிலேயே தங்கவைத்துப் பயிற்சி அளித்து வருகிறார். கல்லூரி படிக்கும்போது ஜூனியர், சீனியர் பிரிவில் இந்தியா அளவில் தங்கப் பதக்கம் பெற்றேன்.
பின்னர் பஞ்சாப்பில் உள்ள இந்தியன் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் 2 ஆண்டுகளாக தங்கிப் பயிற்சி பெற்று வருகிறேன். வெளிநாடுகளில் நடைபெறும் போட்டியில் பங்கேற்றுப் பரிசு பெற்று வருகிறேன். 2019 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4ஆம் இடம் பெற்றேன். கத்தார் தோஹாவில் நடந்த ‘வேர்ல்டு சாம்பியன்ஷிப்’ போட்டியில் பங்கேற்றபோது காலில் காயங்கள் ஏற்பட்டன.
அப்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு நடந்தது. அதில் கலந்துகொள்ள முடியாத வகையில் காலில் காயங்கள் இருந்தன. எனது பயிற்சியாளர் கண்ணன், மற்றும் சக வீரர்கள் உற்சாகப்படுத்தியதால் 2 மாதக் கடும் பயிற்சிக்குப் பிறகு தகுதிப்போட்டியில் பங்கேற்றேன். இதில் 4 X 400 மீ தொடர் ஓட்டத்தை தூரத்தை 53.55 நிமிடங்களில் கடந்தேன். 4 X 400 மீ கலப்புத் தொடர் ஓட்டப் பிரிவில் தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளேன். இந்தியா சார்பில் பங்கேற்பது குறித்து பெருமிதமாக உள்ளது. இதற்குக் காரணமான பயிற்சியாளர் கண்ணன், எனது பாட்டி ஆரம்மாளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''.
இவ்வாறு ரேவதி தெரிவித்தார்.