இலங்கையில் பயணம் மேற்கொண்டு விளையாடிவரும் இந்திய அணி, தங்களுக்குள் நடத்திக்கொண்ட ஆட்டத்தில் ஷிகர் தவண் அணியை தோற்கடித்துள்ளது புவனேஷ்வர் தலைமையிலான அணி.
இலங்கைக்கு ஷிகர் தவண் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 13ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி வீரர்களுக்கு இடையே அணி பிரிக்கப்பட்டு நேற்று போட்டி நடத்தப்பட்டது.
கொழும்பு நகரில் உள்ள எஸ்எஸ்சி மைதானத்தில் நேற்று இந்திய அணிக்குள் டி20 ஆட்டம் நடந்தது. முதலில் பேட் செய்த ஷிகர் தவண் தலைமையிலான அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட் 30 ரன்களும், மணிஷ் பாண்டே 45 பந்துகளில் 63 ரன்களும் சேர்த்தனர். புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
155 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் புவனேஷ்வர் குமார் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்கார்ரகள் பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல் இருவரும் சேர்ந்து 60 ரன்களுக்கு மேல் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
அடுத்துவந்த சூர்யகுமார் யாதவ் தனக்கே உரிய அதிரடி பாணியில் அரைசதம் அடித்து 17 ஓவர்களில் இலக்கை அடைய உதவி செய்தார்.
இந்த ஆட்டம் குறித்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் பராஸ் பாம்பரே கூறுகையில் “ வீரர்கள் திறமையை, சூழலுக்கு ஏற்றார்போல் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை அறிய இந்தப் போட்டி நடத்தப்பட்டது. ஈரப்பதமான சூழலிலும் வீரர்கள் சிறப்பாக பேட் செய்தனர்.
ஷிகர் தவண் அணி அடித்த ஸ்கோரை எளிதாக 2-வது பேட் செய்த புவனேஷ்வர் அணி சேஸிங் செய்தது. ஆதலால், அடுத்தப் போட்டியில் இலக்கை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளோம் இன்னும் 40 ரன்கள் கூடுதலாகச் சேர்த்தால்தான் இந்த ஆடுகளத்தில் இலக்கு சவாலானதாக அமையும்” எனத் தெரிவித்தார்.