டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய தேசிய கொடியை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதொர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்தர் பத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் நடைபெறும் தொடக்க விழா அணிவகுப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசிய கொடியை ஏந்தியபடி இந்திய குழுவினரை வழிநடத்திச் செல்வார்கள். ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்” எனத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சுமார் 126 வீரர், வீராங்கனைகளும் 75 அதிகாரிகளும் என இந்தியாவில் இருந்து சுமார் 201 பேர் பங்கேற்கக்கூடும் எனவும் இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் வரும் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.