விளையாட்டு

ஆசிய ரக்பி செவன்ஸ் போட்டி: இந்திய ஆடவர் அணி 2 ஆட்டத்தில் வெற்றி

செய்திப்பிரிவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் சார்பில் ஏசியன் ரக்பி செவன்ஸ் இரண்டாவது சீசன் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. இதில் ஆடவர் பிரிவில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டன. மகளிர் பிரிவில் இந்தியா, குவாம், தென் கொரியா, நேபாளம், இந்தோனேஷியா உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன.தொடக்க விழாவுக்கு தமிழக மின்வாரி யத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சுந்தர ராஜ், மேயர் சைதை துரைசாமி மற்றும் ஜப்பான் தூதர் ஷெயிஜி பாபா, அரசு செயலர் ராஜேந்திர குமார், எஸ்டிஏடி உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ், மற்றும் ரக்பி இந்தியா துணைத்தலைவர் அஹா ஹூசைன், ஆசிய ரக்பி தலைவர் கோஜி தோஹூமாஸூ, தமிழ்நாடு ரக்பி சங்க தலைவர்கள் பரணீஸ்வரன், ராஜ்சத்யன், தென்னிந்திய ரக்பி கால்பந்து சங்க பொதுச்செயலாளர் செந்தில் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நேற்றைய முதல் நாள் ஆட்டத் தில் இந்திய ஆடவர் அணி 41-0 என்ற கணக்கில் நேபாளத்தையும், 47-0 என்ற கணக்கில் சிரியாவையும் தோற்கடித்தது. மகளிர் பிரிவில் இந்தியா முதல் ஆட்டத்தில் 36-0 என்ற கணக்கில் சிரியாவை வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவிடம் 26-0 என தோல்வியடைந்தது.

SCROLL FOR NEXT