விளையாட்டு

யூரோ கால்பந்து தொடர்: கால் இறுதி சுற்றுக்குள் கால்பதித்தது உக்ரைன்

செய்திப்பிரிவு

யூரோ கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் சுவீடன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் கால் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது உக்ரைன்.

கிளாஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 27-வது நிமிடத்தில் உக்ரைன் முதல் கோலை அடித்தது. ஆண்ட்ரி யர்மோலென்கோ உதவியுடன் பந்தை பெற்ற ஒலெக்சாண்டர் ஜின்கென்கோ பாக்ஸின் இடது புறத்தில் உதைத்த பந்து கோல் வலையின் வலது ஓரத்தை துளைக்க உக்ரைன் 1-0 என முன்னிலை பெற்றது. 43-வது நிமிடத்தில் சுவீடன் அணி இதற்கு பதிலடி கொடுத்தது.

அலெக்சாண்டர் இசாக் உதவியுடன் இந்த கோலை எமில் ஃபோர்பெர்க் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது. 2-வது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

இதனால் வெற்றியை தீர்மானிக்க கூதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதன் 8-வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ஆர்ட்டெம் பெசெடினை விதிமுறைகளை மீறி சுவீடன் மார்கஸ் டேனியல்சன் இடைமறித்தார். இதில் ஆர்ட்டெம் பெசெடின் காயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து மார்கஸ் டேனியல்சனுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால் சுவீடன் அணி 10 வீரர்களுடன் விளையாடியது.

கூடுதல் நேரத்தில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட முதல் நிமிடத்தில் ஒலெக்சாண்டர் ஜின்கென்கோ அடித்த கிராஸை ஆர்ட்டெம் டோவ்பிக் தலையால் முட்டி கோல் அடிக்க உக்ரைன் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. கால் இறுதி சுற்றில் சுவீடன் அணியானது வரும் 3-ம் தேதி நள்ளிரவு இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

SCROLL FOR NEXT