டெஸ்ட் கேப்டன்சியில் புதிய சாதனைகளை நோக்கி முன்னேறி வரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜை பிசிசிஐ சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாகத் தேர்வு செய்துள்ளது. விருதுகள் ஜனவரி 5-ம் தேதி மும்பையில் வழங்கப்படுகின்றன.
மகேந்திர சிங் தோனி ஆஸ்திரேலியா தொடரில் திடீரென டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு அறிவிக்க கேப்டன்சி பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட விராட் கோலி, வங்கதேசத் தொடருக்குப் பிறகு இலங்கையை அதன் மண்ணில் 2-1 என்று டெஸ்ட் தொடரை வென்றதோடு, தென் ஆப்பிரிக்காவை முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் 3-0 என்று வீழ்த்தி சாதனை நிகழ்த்தினார்.
இலங்கையில் டெஸ்ட் தொடர் வெற்றி 22 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிக்கப்பட்டது என்றால், 9 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா என்ற உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி அயல் மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்கச் செய்தது கோலி தலைமை இந்திய அணி.
15 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 640 ரன்களை 42.67 என்ற சராசரியில் எடுத்த விராட் கோலி, 20 ஒருநாள் போட்டிகளில் 623 ரன்களை 36.65 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் 5,000 ரன்களை பூர்த்தி செய்த முதல் இந்திய வீராங்கனை என்பதோடு, உலக அளவில் 5,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் சிறந்த மாநில கிரிக்கெட் அணியாக கர்நாடக கிரிக்கெட் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ரஞ்சி கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை எடுத்த ராபின் உத்தப்பா மாதவ்ராவ் சிந்தியா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 11 போட்டிகளில் 50.66 என்ற சராசரியில் அவர் 912 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
சிறந்த உள்நாட்டு கிரிக்கெட் பந்துவீச்சாளர் விருது வினய் குமார் மற்றும் மும்பையின் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.