விளையாட்டு

இறுதிப்போட்டிக்கு கோவா தகுதி: டெல்லி டைனமோஸை வீழ்த்தியது

செய்திப்பிரிவு

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 2வது கட்ட அரையிறுதியில் டெல்லி அணியை தோற்கடித்து கோவா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரையிறுதியில் டெல்லி டைனமோஸ் 1-0 என்ற கோல் கணக்கில் எப்.சி. கோவா அணியை வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளும் நேற்று 2வது கட்ட அரையிறுதியில் படோர்டாவில் மோதின. கோவா அணி 3-5-2 என்ற பார்மட்டிலும், டெல்லி அணி 4-4-1-1 என்ற பார்மட்டிலும் களமிறங்கியது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கோவா முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஜோபிரி, எதிரணியின் தடுப்பு அரண்களை மீறி பந்தை லாவகமாக முன்னேறி எடுத்துச்சென்று கோல் அடித்தார். 27வது நிமிடத்தில் மந்தர் தேஸா உதவியுடன் ரபேல் கோயல்ஹோ கோல் அடிக்க கோவா 2-0 என முன்னிலைப்பெற்றது. டெல்லி வீரர்கள் தங்களுக்கு கிடைத்த சில வாய்ப்புகளை வீணடித்ததால் முதல் பாதியில் கோல் அடிக்க முடியாமல் போனது.

2வது பாதியிலும் கோவா அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் கோவா மேலும் ஒரு கோல் அடித்தது. அந்த அணியின் டுடு இந்த கோலை அடித்தார். கடைசி வரை டெல்லி அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் கோவா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் கட்ட அரையிறுதியில் கோவா அணி ஒரு கோல் வாங்கியிருந்தது. இதனால் கோல்விகிதப்படி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோவா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இறுதிப்போட்டி வரும் 20ம் தேதி படோர்டாவில் நடைபெறுகிறது. இதில் சாம்பியன் பட்டம் வெல்ல கோவா அணியுடன் மோதும் மற்றொரு அணி எது என்பது இன்று தெரியும். இதற்கான ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

          
SCROLL FOR NEXT