மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக ஹோபர்ட்டில் நடைபெற்று வரும் டெஸ்ட்டில் முதல் நாளில் ஆஸ்திரேலியா 89 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்தது. ஆடம் வோஜஸ் 174, ஷான் மார்ஷ் 139 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந் தனர். 226 பந்தில் 21 பவுண்டரி களுடன் வோஜஸ் இரட்டை சதம் அடித்தார். மார்ஷ் இரட்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 182 ரன்னில், வாரிகன் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 226 பந்துகளில், 15 பவுண்டரி, 1 சிக்ஸருடன் இந்த ரன்களை சேர்த்தார்.
114 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்தி ரேலியா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அப்போது வோஜஸ் 285 பந்தில் 33 பவுண்டரிகளுடன் 269 ரன்னுடனும் மிட்செல் மார்ஷ் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மேற்கிந்தியத்தீவுகள் தரப்பில் வாரிகன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட் செய்த மேற்கிந்தியத்தீவுகள் 116 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. பரத்வெயிட்டி 2, சந்திரிகா 25, சாமுவேல்ஸ் 9, பிளாக்வுட் 0, ரம்தின் 8, ஜேசன் ஹோல்டர் 15 ரன்னில் வெளியேறினர்.
8வது விக்கெட்டுக்கு பிராவோவுடன் இணைந்த கேமார் ரோச் நிதானமாக ஆடினார். இதனால் ஆட்ட நேரம் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் 65 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்தது. ஆஸி. தரப்பில் நாதன் லயன் 3 விக்கெட் கைப்பற்றினர்.
கைவசம் 4 விக்கெட்கள் மீதமிருக்க மேற்கிந்தியத்தீவுகள் 376 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
வோஜஸ்-மார்ஷ் ஜோடி சாதனை
வோஜஸ்-மார்ஷ் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 449 ரன்கள் குவித்தது. கிரிக்கெட் வரலாற் றில் 4-வது விக்கெட்டுக்காக சேர்க்கப்பட்ட அதிக ரன்கள் இது தான். இதற்கு முன்பு கராச்சி யில் 2009-ம் ஆண்டு பாகிஸ்தா னுக்கு எதிராக இலங்கையின் ஜெயவர்தனே, சமரவீரா ஜோடி 437 ரன்கள் குவித்திருந்தது. இந்த சாதனையை வோஜஸ், மார்ஷ் ஜோடி முறியடித்தது. மேலும் ஆஸி. மண்ணில் ஒரு ஜோடி குவித்த அதிகபட்ச ரன்களாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் சிட்னியில் 1946ல் இங்கிலாந்துக்கு எதிராக பிராட்மேன்-பார்னஸ் ஜோடி 405 ரன்கள் குவித்திருந்தது.